பாலை - குறிஞ்சி - யிரண்டற்கும் யானை கருப்பொருளாதல் பற்றிக் களிற்றுக்கன்று வடிக்கும் ஒலி என்று முன்கூறிய குறிப்பும் காண்க. |
வேலை ஒலி - வேலை இந்நகரினைச் சூழ்ந்த மேல்கடல்; “மலைக்குநிக ரொப்பன வன்றிரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண், டலைக்குங் கடலங் கரைமேன் மகோதை யணியார்பொழி லஞ்சைக்களம்” (தேவா); ஒலி - ஒலியினையும்; உயர்வு சிறப்பும்மை தொக்கது; இக்கடல் ஒலியின் மிகுதிபற்றி தேவாரத்துட் காண்க. |
| விளங்கிப் பொங்கும் - என்பதும் பாடம். 2 |
| 3750. | மிக்க செல்வ மனைகடொறும் விழையு மின்பம் விளங்குவன; பக்க நெருங்கு சாலைதொறும் பயில்சட் டறங்கள் பல்குவன; தக்க வன்பர் மடங்கடொறுஞ் சைவ மெய்ம்மை சாற்றுவன; தொக்க வளங்கொ ளிடங்கடொறு மடங்க நிதியந் துவன்றுவன. 3 |
(இ-ள்) மிக்க...விளங்குவன - செல்வமிக்க வீடுகள் தோறும் விழைகின்ற இல்லற இன்பங்கள் விளக்கம் பொருந்தியன; பக்கம்....பல்குவன - மனைகளின் பக்கங்களில் நெருங்கிய சாலைகள் தோறும் செய்யப்படுகின்ற செப்பமாகிய அறங்கள் பெருகுவன; தக்க...சாற்றுவன - தகுந்த அன்பர்கள் வாழும் திருமடங்கள் தோறும் சைவத்தின் உண்மைப் பொருள்கள் எடுத்துக் கூறப்படுவன; தொக்க...துவன்றுவன - தொகுதியாகக் கூடிய வளங்களைத் தம்மிடத்துக் கொள்கின்ற இடங்கள் தோறும் நிறம்பிய நிதியங்கள் தோன்றுவன. |
| (வி-ரை) இன்பம் - அறங்கள் - சைவமெய்ம்மை - நிதியம் - இப்பாட்டில் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கும் அந்நாட்டின் விளங்கும் நிலையினைக் கூறிய கவிநலம் கண்டு கொள்க; நிதியம் - பொருள்; சைவமெய்ம்மை - வீடு. |
இன்பம் - அறம் - (வீடு) சைவமெய்ம்மை - பொருள் என்று இம்முறையில் வைத்தார். உயிர்கள் எல்லாம் விழைவதும் விழையத் தக்கதும் இன்பமே யாதலின் அது முதற்கண் வைக்கப்பட்டது. அவ்வின்பந்தானும் அறத்தின் வழி வருதலும் துய்த்தலும் படுவதாதலின் அறம் அதனை அடுத்து வைக்கப்பட்டது; “அறத்தான் வருவதே இன்பம்” (குறள்); அழியா இன்பமாகிய பேரின்ப வீடு அதன்பின் வரும் முறைபற்றி அதனை அடுத்துக் கூறினார்; “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும்” “நடுவண தெய்த விருதலையும் எய்தும்” என்றபடி அறத்திற்கும் இன்பத்துக்கும் வீடுகாட்டும் திருமடங்களுக்கும் ஒரு வகையால் சாதனமாய் நிற்பது பொருள் என்ப வாதலின் காரிய காரண முறையால் இறுதிக்கண் வைத்துக் கூறினார்; அன்றியும், இங்கு நகரச் சிறப்பாகிய நகர வளங் கூறுதலே முறையும் கருத்துமாதலின் அம்முறை பற்றி முடித்துக் கூறும் வகையால் தொக்கவளங்கொள் என்று இறுதியில் வைத்த கருத்துமாம். இடங்கள் - முன்கூறிய மூவகையிடங்களையும் குறிப்பாலுணர்த்துதலும் காண்க. இவ்வாறன்றி, இதனை அடிமாற்றும் ஓர் பொருள் கோளாய் நின்றதென்று கொண்டு அதற்கேற்ப அடிகளை மாற்றிப் பொருள் கொண்டனர் ஆறுமுகத் தம்பிரானார். அடிமறி மண்டில ஆசிரியமுமாம். |
செல்வ மனைகள் - செல்வம் - அறத்தாற்றின் ஈட்டப்பட்டதாய் வருவது. “தம் பொருள் என்ப தம்மக்கள்” (குறள்) என்றபடி, செல்வம் - நன்மக்களுடைமை என்றலுமாம். தொறு - இடம் காலங்களின் இடையீடின்மை தரும் இடைச்சொல். |