விழையும் இன்பம் - விழைதல் - விரும்புதல்; விரும்பத்தக்க என்றபடி; நூல்களுள் விதித்தவாறே அமைந்தொழுகித் துய்க்கப்படும் நிலை குறித்தது. |
விளங்குவன - இன்பம் மனநிகழ்ச்சி யாதலின் அது புறத்தும் காணப்படும்படி உள்ள அடையாளங்கள் வெளிப்படுவன. |
| பக்கம் - மனைகளின் பக்கமும், நகரின் பக்கமும்; சாலை - அறச்சாலைகள். |
சட்டறங்கள் - செப்பமாகிய அறங்கள்; சட்ட அறங்கள் என்றது சட்டறங்கள் என நின்றது; சட்ட என்பது “செப்பப் பொருட்டாயதோர் அகரவீற் றிடைச் சொல்” என்று “சட்ட வினியுளது சத்தே காண்” (போதம். 9 - 2) என்ற விடத்துரைத்தனர் எமது மாதவச் சிவஞான முனிவர். பயிலுதல் - வழங்குதல்; பல்குதல் - மிகுதல். “சட்டவிக் கதவம்”, “சட்டகலை யெட்டு”, “சட்ட நேர்பட”. |
அன்பர் - சிவன்பா லன்புடைய அடியார்கள்; அன்பர்கள் வாழும் இடங்களே மடங்கள் எனப்படும். |
| சைவ மெய்ம்மை சாற்றுவன - மெய்ம்மைகள் சாற்றப்படுவன என்று பிறவினையாகப் பொருள் கொள்க. சாற்றுதலாவது விதிவழி உபதேசித்தலும், ஒழுக்கத்தால் அறிவித்தலுமாம். சைவநெறியே வீட்டு நெறியைக் காட்டவல்ல தென்பது முடித்துக் காட்டப்பட்டவாறு காண்க. “வீடு காட் டுந்நெறி, மண்ணுலாவுந் நெறி” (பிள் - தேவா - கொல்லி - திருந்து தேவன்குடி - 5) நகரச் சிறப்புக் கூறுமாற்றால் சைவத்தின் மேனிலை காட்டுவது உட்குறிப்பு; “கருத்தின் பயனா மெழுத்தஞ்சும்...வேதப்பயனாம் சைவமும்போல்” (1214) என்று இவ்வாறே உவமை முகத்தால் நகரச்சிறப்பினைக் கூறும் வகையால் சைவச் சிறப்புக் கூறிய திறம் இங்கு நினைவு கூர்தற்பாலது. விளங்குவன - பல்குவன - சாற்றுவன போல இடங்கடொறும் நிதியம் துவன்றுவன என்றலுமாம். |
தொக்கவளங் கொள் இடங்கள் - தொகுதியாகச் செறிந்த வளங்களைச் சேமித்து கொண்ட வைப்பு இடங்கள். வளங்கள் - விளைபொருள்கள்; நிதியம் - அவற்றாற் பெற்ற மணி, பொன், வெள்ளி முதலியவை. அடங்க - நிறைய; துவன்றுவன - விளங்குவன. தோன்றுவன. |
விளையும் இன்பம் - பயினெட்டறங்கள் - பயிலுவன - அணிசெய் மடங்கள் - சைவமேன்மை - என்பனவும் பாடங்கள். 3 |
3751. | வேத நெறியின் முறைபிறழா மிக்க வொழுக்கந் தலைநின்ற சாதி நான்கு நிலைதழைக்குந் தன்மைத் தாகித் தடைமதில்சூழ் சூத வகுள சரளநிரை துதையுஞ் சோலை வளநகர்தான் ‘கோதை யரசர் மகோதை’யெனக் குலவு பெயரு முடைத்துலகில். 4 |
(இ-ள்) வேத....தன்மைத்தாகி - வேதங்களின் விதித்த நெறியினது முறைகளின்றும் வழுவாத மிகுந்த நல்லொழுக்கத்திலே சிறந்த நான்கு சாதிகளும் தத்தம் நிலைகளில் நிலைத்து ஓங்கும் தன்மையை உடையதாகி; தடமதில்சூழ்...நகர்தான் - பெரிய மதில் சூழ்ந்த மா - மகிழ் - சரளம் முதலிய மரங்களின் வரிசை நெருங்கிய சோலைகள் சூழ்ந்த வளப்பமுடைய அந்நகரம்; கோதை அரசர்....உலகில் - உலகத்தில் கோதை எனப்படும் சேர அரசர்கள் ஆளும் தலைநகராகிய மகோதை என்ற விளக்கமாகிய பெயரும் உடையது. |
(வி-ரை) நகர்தான் - தன்மைத்தாகிப் - பெயரும் உடைத்து - என்று கூட்டுக. |