பக்கம் எண் :

பெரியபுராணம்603

 
நின்று முழக்கிய முழக்கம் விண்ணெல்லாம் வந்து எதிர்ந்திசைக்க என்றலுமாம்;-(9)
இந்திரன்....அருள் புரிந்து - சரித ஆதரவாதிய சிறந்த அகச் சான்று; ஈண்டுக்
குறித்த இந்திரன் முதலியோர் சிவதத்துவத்தின் பாற்பாட்ட வித்தியா தத்துவத்தில்
வாழ்பவர் என்பர். மந்திரமா முனிவர்....நந்தமர் ஊரன் என்றான் - இது
திருமலைச்சிறப்பிற் கூறியபடிஉபமன்னிய முனிவர் கூற்றுக்குச் சிறந்த பேராதரவாகிய
அகச்சான்று
; மந்திரமா முனிவர் - உபமன்னிய முனிவர்; இவன் ஆர் என -
"அண்ணல் தாள் சிந்தியா" (27), இறைவரை நினைந்து, "வருகின்ற இவர் யார்" என்று
தியானித்துக் கேட்க, "நந்தமர் ஊரன்" என்றான் நொடித்தான்மலை யுத்தமனே -
அதற்கு, "வருகின்றவன் நமது தமர் (அன்பன்) ஆகிய நம்பியாரூரன் என்று அவருக்கு
உணர்த்த, அவர் "உணர்ந்து" ஏனை முனிவர்களுக்கு உணர்த்தியருளினார்; எனவே,
வெள்ளையானையின் மேல் திருக்கயிலையினை நோக்கித் திருவருளால் வருகின்ற
நம்பிகளது உடல் மட்டும் யானையின் மேலிருக்கச், சிந்தனை முழுதும் கயிலையில்
அழுந்தி நிற்றலின், அங்கு இறைவரை உபமன்னியர் சிந்தித்ததும், இறைவர் அவருக்கு
உண்ணின்று உணர்த்தியதும் அந்நிறைவாகிய தமது நினைவில் இங்கு நின்றபடியே
நம்பிகள் உணர்ந்தனர் என்பதாம். கயிலாய யாத்திரையில் ஆளுடைய அரசுகளது
திருவுடல் தேய்ந்து கிடக்கச் சிந்தை கயிலையைச் சென்று சேர்ந்த நிலை ஈண்டுக்
கருதத் தக்கது. "அங்க மெங்கு மரைந்திடச், செப்பருங் கயிலைக் குலக்கிரி சிந்தை
சென்றுறும்" (1625); நம்பிகளது உயிர் சிவத்தன்மை பெற்றிருந்தபடியால் அவர்
அருளால் இவ்வாறு அறிந்து பாடவல்லவராயினர் என்க. இதன் அருமை பெருமைகள்
மிகவும் போற்றத்தக்கன-(10) ஊழி...உயர் - உகக்கடை முடிவுதோறும் அழுந்தாது
உயரும்; ஆழி கடலரையா....அறிவிப்பதே - இப்பதிகப் பாட்டான பத்தினையும்,
வருணனே! நீ சுமந்து சென்று திருவஞ்சைக் களத்தப்பன் திருமுன்பு அறிவிக்கக்
கடவாய் என்று ஆணையிட்டனர் என்க. அவ்வாணையின்படியே வருணன்
அறிவித்தபடியால் கயிலை செல்லும் வழியிலே அருளப்பட்ட இப்பதிகம் இந்நிலவுலகில்
அறியப்பட்டு வழங்கலாயிற்று என்பது. கடலரசன் திரைகளாகிய கைகள் மோதும்
கரைமேல் திருவஞ்சைக்கள முள்ளதாதலின் அப்பொருத்தம்பற்றி அங்கு இந்திரன்
முதலிய தேவர்களுடனே வந்திருந்த வருணனுக்கு ஆணையிட்டபடியாம். கடலுக்கு
உரியவன் வருணனாதலின் அவ்வழியே அவன் அதனைச் செலுத்தினன் என்க.
ஒலியலைகள் ஆகாய வெளியின் மூலம் யாண்டும் பரவுமியல்புடையன என்னு
முண்மை, நீண்ட நெடுந்தூர மிடைப்பட்ட பேச்சுக்கள் வானொலியில் வாயுவினாற்
செலுத்தப்பட்டுக் கேட்கப்படுதல் காணும் இந்நாள் மாக்கள் இவ்வரலாற்றில்
ஐயங்கொள்ள இடமில்லை என்க; "கடல் அரையா!" என்றது அவ்வொலியலைகளைத்
தன்வசம் வாங்கிப் புலப்படுத்தும் நிலையம் என்ற துணையேயமைந்தது; (Receiving
Station); "கடலங் கரைமேன் மகோதை யணியார் பொழி லஞ்சைக்களத் தப்பனே"
(தேவா); திருவஞ்சைக்களத் தப்பரிடம் நம்பிகள் செய்த விண்ணப்பம் திருக்கயிலையிற்
கேட்டுக் கயிலாயநாதர் யானையினை யனுப்ப, அதன் மேலேறிக் கயிலை
சென்றாராதலின், தாம் குறித்த இடத்தைச் சென்று சேர்ந்த நிலையினை உலகியல்
முறைப்படி தாம் புறப்பட்ட இடத்துக் கறிவித்த முறையும் காண்க. (இருப்புப்பாதை
வண்டி நிலையங்களின் வழக்கு).
 
     தலவிசேடம் :- நொடித்தான் மலை - திருக்கயிலைமலை. நொடித்தான் -
அழிப்பவன். அரன்; நொடித்தல் - அழித்தல் - "நொடித்தன்றே" (போதம் 1 - 2
வெண்பா) என்றவிடத்து இப்பொருளை எமது மாதவச் சிவஞானமுனிவர் விளக்கி
இதனை மேற்கோளாகக் காட்டிருத்தல் காண்க. தலவிசேடம் :-III பக்கம் 626 பார்க்க.