பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்604

 
4268. மாசில்வெண்மைசேர் பேரொளியுலகெலா மலர்ந்திடவளர்மெய்ம்மை
ஆசி லன்பர்தஞ் சிந்தைபோல் விளங்கிய மணிகிள ரணிவாயில்
தேசு தங்கிய யானையும் புரவியு மிழிந்துசே ணிடைச்செல்வார்
ஈசர் வெள்ளிமா மலைத்தடம் பலகடந் தெய்தினர் மணிவாயில்.   

40
 

     (இ-ள்) மாசில்.....மலர்ந்திட - குற்றமற்ற வெண்மையோடு பொருந்திய திருநீறு
போன்ற பெரிய ஒளியானது உலகெல்லாம் விரிய; வளர்.....மணிவாயில் - வளரும்
மெய்ம்மையாகிய குற்றமில்லாத அன்பர்களுடைய சிந்தைபோல விளங்கிய அழகு
மிகுந்த மலையின் அணிவாயிலின்கண்; தேசு.....செல்வார் - ஒளியினையுடைய
யானையினின்றும் குதிரையினின்றும் முறையே இருவரும் இறங்கி நெடுந்தூரம்
செல்வார்களாகி; ஈசர்.....மணிவாயில் - இறைவருடைய பெரிய வெள்ளிமலையின்
இடங்கள் பலவற்றையும் கடந்து அழகிய மணிவாயிலில் வந்து சேர்ந்தனர்.
 
     (வி-ரை) மாசில் வெண்மைசேர் பேரொளி - இது இமயமால் வரையின்
சாரலில் உள்ளமையானும், கயிலைமலை பனியினால் மூடப்பட்டமையானும் ஆவது.
"பொன்னின் வெண்டிரு நீறு புனைந்தென" (11) என்றது காண்க. மாசில் வெண்மை
என்றது அக்குறிப்புத் தருவது. மாசில் - குற்றத்தை நீக்கும் என்ற குறிப்புமுடையது;
ஆசில் - குற்றமற்ற.
 
     "உலகெலாம்" - இப்புராணத்திற்கு இறைவர் கொடுத்தருளிய முதன் மொழி;
கயிலையினின்றும் போந்த நம்பிகள் மீளத்திருக்கயிலைக்கு வரும் அரிய பெரிய நிலை
குறிக்கும் இடமாதலின் இங்கு அதனை வைத்தருளினர் என்க.
 
     வளர்.....வாயில் - அன்பர்களது சிந்தைபோல மலையின் வாயில் விளங்கிற்று.
மெய்பற்றி வந்த உவமம். என்னை? இறைவர் வீற்றிருப்பதனாலும், பெருமையினாலும்,
மெய்யொளித் தூய்மையினும் அன்பர் சிந்தை போன்றது என்க. 22வது பாட்டுப்
பார்க்க; ஆசிலன்பர் - நம்பிகளும் சேரமானாரும் ஆகிய குறிப்பும், அநபாயர் என்ற
குறிப்பும் காண்க. "ஓங்கு நிலைத்தன்மை"யாலும், "தீங்கு நெறியடையாத
தடை"யாதலாலும், வாயில். அன்பர் சிந்தைபோல் விளங்கிற்று என்றலுமாம். (1165) முன்
உரைத்தவை பார்க்க.
 
     அணிவாயில் - இது மலையினை அணுக உள்ள தாழ்வரையின் வாயில்; மேல்
மணிவாயில் என்பது மலையின் மேல் உள்ள திருக்கோயிலின் வாயில்.
     யானையும் புரவியும் இழிந்து - யானையினின்றும் குதிரையினின்றும் முறையே
நம்பிகளும் சேரர் பெருமானும் இழிந்து : நீக்கப் பொருளில் வரும் ஐந்தனுருபுகள்
தொக்கன.
 
     சேணிடை - மலைத்தாழ்வரை வாயிலினின்றும் நெடுந்தூரம் ஏறிச் சென்ற
பின்னரே கோயிலின் திருவாயில் அடையத்தக்கது.
 
     தடம் - இடங்கள்; தடை - என்பது பாடமாயின் வழியிடைப் பலவாயில்கள்
என்க. 40
 
4269. அங்க ணெய்திய திருவணுக் கன்றிரு வாயிலி னடற்சேரர்
தங்கள் காவலர் தடையுண்டு நின்றனர்; தம்பிரா னருளாலே,
பொங்குமாமதம் பொழிந்தவெள்ளானையினும்பர்போற் றிடப்போந்த
நங்கள் நாவலூர்க் காவலர் நண்ணினா ரண்ணலார் திருமுன்பு.  

41