பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்614

 
மான் படை பெற்றமையால் இது திருப்படையூர் எனப்பெறும். பங்குனி மாதம் 18 தேதி
முதல் 21 தேதி வரை சூரிய பூசை காணப்படும்; கைலாய நாதர் கோயில் தேர் போலக்
கல்லால் நல்ல பணி செய்யப்பட்டுள்ளது. தில்லை மூவாயிரவர் பூசித்தது; இந்திரன் -
மால் - மண்டூக முனிவர் - ஏழு கன்னியர் இங்குப் பூசித்துப் பேறு பெற்றனர். குறிப்பு
இங்கு உள்ள மாசாத்தனார் கோயிலை உள்ளவாறே திருப்பணி செய்து செப்பனிடுவது
சிறந்த சிவபுண்ணியமாகும். சுவாமி - பிரமபுரீசர் - கைலாயநாதர்; அம்மை -
பிரமநாயகி - கௌரி; தீர்த்தம் - புலிப்பாய்ச்சித் தீர்த்தம்; இதில் ஆடி 18 தேதி
சிறப்பு. இதன் நீரை எடுத்து வீட்டில் வைத்து வழிபடுவோர் பலர்; வியாக்ரபாதர்
வழிபாடு பற்றி இப்பெயர் பெற்றது போலும்.
 
     கோயில் கொண்டருளுதல் - கோயிலில் நிலைபெற விளங்க வீற்றிருத்தல்.
 

வேறு
 

4281.     என்று மின்பம் பெருகு மியல்பினால்
ஒன்று காதலித் துள்ளமு மோங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி யுலகெலாம்.                              53
 
     (இ-ள்) எக்காலத்தும் எவ்விடத்தும் சிவனது இன்பம் பெருகுகின்ற இயல்பினால்
காதலிக்கத்தக்க தொரே பொருளாகிய இறைவரைக் காதலித்து உயிர் சிவனடிக்கீழ்
ஓங்கும்படி, அம்பலவாணரதும் அவரடியார்களதும் ஆகிய பெரும் புகழ்கள் உலகத்தில்
என்றும் நிலவி நின்றது. "அம்மையு மிம்மையு முறுதி பயக்கத்தக்க சிவகதை ஏது"
என்பது முதலாக மன்னர் பெருமான் அநபாயச் சோழரால் வினாவப்பட்ட வற்றுக்கு
அளித்த விடைகளையே உட்பொருளாகக் கொண்டு, சைவ சித்தாந்த மெய்ந்நெறியின்
முழு முதல்வனாகிய திருச்சிற்றம்பலவனது சிறப்பியல்பு பொதுவியல்புகளும், அவனை
வழிபாடு செய்யும் நெறிகள் முதலாயினவும் விளக்குமுகத்தால், பெருங்காப்பிய
உறுப்பாகிய மங்கலங் கூறுவான் புகுந்து, "ஆதியு மந்தமு நடுவு மங்கலம், நீதியம்
பனுவல்க ணிலவு மென்பவே" என ஆசிரியர் பதஞ்சலியார் மாபாடியத் தொடக்கத்து
ஓதியவாறு, இந்நூலின் முகத்தும் இடையினும் மங்கலங்கூறிய ஆசிரியர், காப்பியத்
தலைவர் வரலாற்றை முடித்துக் காட்டி நூலிறுதியினும் மங்கலங் கூறுவது வாயிலாக
நூன்முகத்துக் கூறிய உட்பொருளை முடிந்தது முடித்தல் என்பதனால்
நினைப்பிக்கின்றார்.
 
     என்றுமின்பம்....உலகெலாம் - என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் -
இடையறவின்றி இன்பம் வளருதற் கேதுவாகிய சாதனங்களோடு; ஒன்று காதலித்து -
ஏகமாகிய சிவபரம் பொருளையே விரும்பி; உள்ளமும் - உயிரும்; ஓங்கிட - கூன்
நிமிர்ந்து செம்மை பெறும்படி; மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் -
சிற்றம்பலவருடைய தொண்டர்களது சிறந்த புகழ்ச்சரிதமானது; உலகெலாம் நிலவி
எங்கும் நின்றது - உலகங்களெல்லா வற்றிலும் விளக்கமுற்று யாங்கணும் நிலைபெற்றது.
(எ - று).
 
     (வி-ரை) காலத்தான் வறையறைப்படாது பெருகும் இன்பம் என்பார் என்றும்
இன்பம் பெருகும்
என்றும்,ஒன்றற்கொன்று இன்பத்தாற்பெருகும் இயல்பினையுடையன
சரியை கிரியை முதலான சாதனமென்பார் இன்பம் பெருகும் இயல்பினால்