பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்616

 
     அந்நாள்களில் நிலவுலகில் பத்தி முதலான, அன்பு நீரிற் பணைத்து வளர்ந்து
நம்பிகளது செம்பொனிமேனி வனப்பே வடிவாக ஓங்கி, இருவினைக்களைகட்டெறிந்து,
கதிர்களைப் பரப்பி, முடிவில்லாத சிவபோகம் முதிர்ந்து முறுகி விளைந்தது.
 
     அக்காலத்தில் நம்பிகள் சேரமான் பெருமாளை மிகவும் நினைந்து இறைவரை
வணங்கி, அவரைக் காணும் பொருட்டு மிக்க விருப்புடன் மலைநாட்டில்
அணைவதற்குச் செல்வாராயினர்; இடையிலே உள்ள திருப்பதிகள் பலவற்றையும்
வணங்கிச் சென்று கொங்கு நாட்டினில் அணைந்து திருப்புக் கொளியூரினைச் சேர்ந்து
மாட வீதியில் சென்றனர். அங்கு எதிர் எதிராகச் செல்வ மனைகளிரண்டனுள், ஒரே
காலத்தில் ஒன்றில் மங்கல இயங்களின் ஒலியும், ஒன்றில் அழுகை ஒலியும் எழுந்தன;
அதனைக் கண்டு இரண்டும் உடனே நிகழ்வது என்?” என்று அங்குள்ள
மறையோர்களை நம்பிகள் வினவியருளினர்; அதற்கு அவர்கள் அந்தணச்
சிறுவர்களிருவர், ஐயாண்டு வந்த பிராயத்தினர், குளித்த மடுவில், ஒருவனை முதலை
விழுங்கியிடப் பிழைத்து வந்த சிறுவனுக்குப் பூனூல் அணியும் கலியாணம் நிகழ்வது
இந்த மனை; மற்று அந்த மனையில் எழுவது மகனை இழந்தவர்களது அழுகை
என்றுரைத்தனர். இதனைக் கேட்டு இரங்கிய திருவுள்ளத்துடன் நம்பிகள் நின்றருளினர்.
அவரைக் காணும்படி நீண்ட நாட்கள் சிந்தை வைத்த மறையவனும் மனைவியும்
அவரது வரவு கேட்டலும், மகனை யிழந்த சோகமும் தெரியாதே விரைந்து வந்து
அவரது திருவடிகளை இறைஞ்சினர்; துன்ப நீங்கி முகமலர்ச்சியுடன் தொழுகின்ற
அவர்களை நோக்கி, இன்ப மகனை இழந்தவர்கள் நீரோ?” என்றருள, அவர்கள்
வணங்கி “அது முன் காலத்து நிகழ்ந்து போனது; எங்கள் அன்பு பழுதாகாமல் தேவரீர்
எழுந்தருளும் பேறு பெற்றோம்; முன்னே வணங்க முயல்கின்றோம்” என்று
தொழுதனர்; மைந்தனை இழந்த துயரினையும் மறந்து நான் வந்தணைந்ததற்கே
அதனினும் மிக்க பதி அன்பு காரணமாக இவர்கள் சிந்தை மகிழ்ந்தனர்; ஆதலின்
திருவருட்டுணை கொண்டு அந்த முதலை வாயினின்றும் அந்த மகனை அழைத்துக்
கொடுத்தபின்பே அவிநாசி எந்தைபாதம்பணிவேன் என்றருளி இடர் களைவாராகி,
அந்த மடு எங்கே என்று கேட்டறிந்து, அங்குச் சென்று அவ்விடத்தேநின்று, முதலை
மகனைக்கொண்டு வரும்படி “எத்தான் மறக்கேன்” என்று தொடங்கித் திருப்பதிகம்
பாடினர். அதனுள் “உரைப்பாருரை” என்ற நான்காவது திருப்பாட்டு முடியா முன்னரே
கழிந்த இரண்டாண்டு வளர்ச்சியும் நிரம்பச்செய்து மறலி, அம்மகவை முதலை
வாயினிற்றருவித்தான். அது கரையில் மகனைக் கொண்டுவந்து உமிழ்ந்தது. அது கண்டு
உருகிய தாயானவள் ஓடிச் சென்று அவனை எடுத்து வந்து, தான், கணவனுடன், உயிர்
கொடுத்த திருவாளராகிய நம்பிகள் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள், தேவர்கள்
மலர் மழை பெய்தனர். மண்ணோர் அதிசயித்தனர்; மறையவர்கள் மகிழ்ந்தனர்;
நம்பிகள் அம்மறையவனையும் மகனையும் உடன் கொண்டு இறைவர்
திருக்கோயிலுக்குச் சென்று பணிந்து திருப்பதிகம் நிறைவாக்கித் துதித்துச் சிறுவனுக்குப்
பூணூல் அணிவித்துக் கலியாண முடித்துக் கொடுத்தருளினர்.
 
     அதன் பின் மலைநாட்டுக்குச் செல்வாராகி, நம்பிகள், மேற்சென்று இடையில்
பதிகள் தோறும் வணங்கி நாடும் காடும் கான்யாறும் பல கடந்து மலைநாட்டினை
அணைந்தருளினர். இவ்வாறு முதலைவாய்ப் பிள்ளை யழைத்து நம்பிகள்
அணைகின்றார் என்ற செய்தியினை அந்நாட்டரனாரடியார்கள் சேரனார்பால் ஓடி
அறிவிக்க, அவர் அவர்க்கெல்லாம் பொன்னும் மணியும்காசும் தூசும் பொழிந்தளித்தார்.
சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்து செய்வதொன்று மறியாது,என் ஐயன் அணைந்தான்!;
அண்ணல்