பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்109


முருகன், விநாயகர் முதலிய தேவர்கள் வழிபட்டுப் பேரின்பம் எய்திய தலம். மணிவாசகப் பெருந்தகை மந்திரியாக இருந்து, வாசகத்தேனை வடித்தெடுத்த திருப்பதி. தருமை ஆதீன முதற்பெருங் குரவர் குருஞானசம்பந்த சுவாமிகள் சொக்கலிங்கப் பெருமானைப் பெற்ற இடம். இவர் திருவுருவம் சொக்கநாதர் சந்நிதிக் கோபுரவாயில் குடவறையில் உள்ளது. குமரகுருபர சுவாமிகள் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாட, அம்மையே இருந்து அதனைக் கேட்கும் ஏற்றம்பெற்ற இடம்.

திருஞான சம்பந்தப்பெருமான் ‘கூடலாலவாய்’ ‘மதுரையாலவாயிலாய்’ எனக் குறிப்பதால் கூடல் மதுரை என்பன தலப்பெயராகவும் ‘ஆலவாய்’ என்பது கோயிற்பெயராகவும் இருக்கலாமோ என ஐயுற இடமுண்டு. இறைவன் சொக்கலிங்க மூர்த்தி. அம்மை மீனாட்சியம்மை. தலவிநாயகர் சித்திவிநாயகர். தலவிருட்சம் கடம்பமரம். தீர்த்தம் பொற்றாமரை. எழுகடல், வையை முதலியனவும் உள்ளன. விமானம் விண்ணிழி விமானமாகிய இந்திரவிமானம். இதனை இந்திரன் கொண்டுவந்து வைத்துச் சோமசுந்தரக்கடவுளைப் பூசித்தான். இவ்விமானம் எட்டு யானைகளால் தாங்கப்பெறுவது. மன்று - வெள்ளிமன்று; இரசதசபை என வழங்கும். இங்கே இராசசேகர பாண்டியன் வேண்டுகோளுக்காகப் பெருமான் இடது காலையூன்றி வலது காலைத்தூக்கி மாறியாடினார்.

மண்டபம்:

‘மண்டபங்கள் நாயன்’ என்பது. இதனைச் சாலிவாகனசகம் 1448-இல் சென்னப்ப நாயகர் என்பவர் திருப்பணி செய்வித்தார். இன்னும் சுவாமிகோயிலில் அர்த்த மண்டபம் மகா மண்டபம், மணிமண்டபம், அறுகாற்பீடம் முதலியன இருக்கின்றன. இவற்றைக் கட்டுவித்தவன் குலசேகர பாண்டியன். மீனாட்சியம்மன் சந்நிதியில் அஷ்டசித்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் முதலிய மண்டபங்கள் இருக்கின்றன. இவையன்றிக் கல்யாணமண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வீரவசும்புரானா மண்டபம், ஆடிவீதி நிருதிவீதி மண்டபம், சம்பந்தர் மண்டபம், அறுபத்துமூவர் மண்டபம் முதலியனவும் விளங்குகின்றன. அவற்றுள் ஆயிரங்கால் மண்டபம் சகம் 1494-இல் அரசாண்ட கிருஷ்ண வீரப்ப நாயக்கரது திருப்பணி என்று சொல்லுகிறார்கள். சொக்கநாதப் பெருமான் கோயிலின் திருவாயில் முத்தளத்தின் திருவாயில் என்று சொக்கநாதர் உலா கூறுகிறது.