பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்111


தரிசினிமடத்துக்கு நிலம் விட்டதையும், (160) கல்வெட்டு ஆமர்த்த மடம் நந்தி கேஸ்வர சந்தானம் சைவ ஆச்சார்யரான ஞானமூர்த்திக்கு மேலக்குடி நாட்டு வடகரை வாரணவாசி பட்டணத்து அண்ணன் விழுப்பாதராசன் மனம் பிரியான் மடம் என ஒன்றைக் கட்டிப் பத்துமா பூதானம் வழங்கினான் என்ற செய்தியையும் குறிக்கிறது. நரலோக சூரியன் திருமடம் என்றும், அன்னதான மடம் என்றும் சில மடங்களின் பெயர்கள் குறிக்கப்படுகின்றன.

9. திருநள்ளாறு

தலம்:

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம், நாகைமாவட்டத்தில் காரைக்காலை அடுத்துள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இது அரசிலாற்றுக்கும் வாஞ்சநதிக்கும் நடுவில் இருப்பதால் நள்ளாறு என்று அழைக்கப்படுவதாயிற்று. தர்ப்பாரணியம், நகவிடங்கபுரம், நளேசுரம் என்பன இதன் மறு பெயர்கள். இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. நளன் வழிபட்ட தலம்.

இறைவன்பெயர் நள்ளாறர்; இறைவிபெயர் போகமார்த்த பூண்முலையம்மை; விநாயகர் கற்பகவிநாயகர், சொர்ணவிநாயகர், தியாகர் நகவிடங்கத் தியாகர்; அம்மன் நீலோற்பலாம்பாள்; நடனம் உன்மத்த நடனம். இத்தலத்தில் சனிபகவான் சந்நிதி மிகச் சிறப்புடையது.

10. திருஆவூர்ப்பசுபதீச்சரம்

தலம்:

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. இப்பெயரமைப்பால் தலத்தின் பெயர் ஆவூர் என்பதும், கோயிலின் பெயர் பசுபதீச்சரம் என்பதும் அறியலாம். இந்திரன், சப்தரிஷிகள், பசுக்கள் பூசித்த தலம். சுவாமிபெயர் பசுபதீசர்.