மகனான விசுவநாத
நாயக்கர் நன்மைக்காக ஒரு கிராமம் (வரகுணபுத்தூர்)
வழங்கப்பட்டது. இவையன்றி நின்ற நாராயண
பெருமாள் கோயிலுக்கும் அங்காளம்மன்
கோயிலுக்கும் நிபந்தங்கள் அளிக்கப்
பெற்றிருப்பதை அறிவிப்பன மூன்று கல்வெட்டுக்கள்.
இங்ஙனம் திருப்புத்தூர்க்கோயில் பல பாண்டிய
மன்னர்களுடைய சமய உணர்ச்சிக்கு அரணாக இருந்தமை
அறிந்து இன்புறுதற்குரியது.
24. திருப்புன்கூர்
சோழநாட்டுக்
காவிரிவடகரைத்தலம். வைத்தீஸ்வரன்
கோயிலிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.
பேருந்து வசதி உண்டு.
இது புன்கமரத்தைத்
தலவிருட்சமாகக் கொண்டதாகலின் திருப்புன்கூர்
எனப்படுவதாயிற்று. வடமொழியில் காஞ்சாரண்யம்
என வழங்கும் இத்தலத்திற்குப் பக்கத்திலுள்ள
ஆதனூரில் அவதரித்த திருநாளைப்போவார் என்னும்
நந்தனார் பக்திக்காக நந்தியை விலகும்படிச்
செய்த தலம். இவர் வெட்டிய திருக்குளம் ஒன்றும்
இருக்கின்றது. இதற்கு வடக்கே உள்ள திருப்
பெருமங்கலத்தில் வசித்த ஏயர்கோன்
கலிக்காமநாயனார் திருக்கோயிலைப் புதுக்கிப்
பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார்.
கலிக்காமர் வேண்டுகோளுக்காக இறைவன் 12 வேலி
நிலங்களைப் பெற்றுக்கொண்டு மழைபெய்வித்து
உலகை உய்வித்தார். இதனைச் சுந்தரமூர்த்தி
சுவாமிகள் தம் பதிகத்து "வையகம் முற்றும்
மாமழை" என்ற பாடலால் குறிப்பிடுகின்றார்கள்.
இச்செய்தி கோயில் திருப்பண்ணியர்
விருத்தத்திலும் கூறப்பெறுகிறது. இறைவன் பெயர்
சிவலோகநாதர்; இறைவிபெயர் சொக்கநாயகி;
தீர்த்தம் கணபதி தீர்த்தம்; விருட்சம்
புன்கமரம்.
கல்வெட்டு:
411 முதல் 415
வரையிலுள்ள ஐந்து கல்வெட்டுக்கள் உள்ளன. 1918இல்
படியெடுக்கப்பெற்றன. இறைவன் சிவலோகமுடையநாதர்
என்று வழங்கப்பெறுகின்றார்1. இராஜராஜன் ஆட்சி
11ம் ஆண்டில் சிவலோகமுடையார் கோயிலிலேயே
வடக்கு இரண்டாம் பிராகாரத்து விக்கிரம
சோழீச்சுர முடைய நாயனார் கோயிலைக்கட்ட
விக்கிரம சோழனான வயநாட்டரையன் மருதூர்
உடையான் நிலமளித்து இருக்கிறான்2.
கோப்பெருஞ்சிங்கன் 2 ஆம் ஆண்டில் இத்தலம்
_____________________________________
1-411 of 1918. 2-412 of 1918
|