சந்நிதியாகவும்,
சூரியனார்கோயில் நவக்கிரகங்களின்
சந்நிதியாகவும், திருவலஞ்சுழி விநாயகர்
சந்நிதியாகவும், சுவாமிமலை முருகன்
சந்நிதியாகவும், சீகாழி வயிரவர்
சந்நிதியாகவும், சேய்ஞலூர் சண்டேசுவரர்
சந்நிதியாகவும் விளங்குகிறதென்பர்.
இத்தலத்துத் தைப்பூசவிழா மிகச் சிறந்தது.
காவிரி அயிராவணத்துறையில் சுவாமிசென்று
தீர்த்தம் அருளுவர்.
கல்வெட்டு:
இத்தலத்தைப்
பற்றிய கல்வெட்டுக்கள் 149. அவை பராந்தகன் I
(கி.பி. 905 - 947) குலோத்துங்கன் III வரையிலுள்ள சோழ
பரம்பரையினர் காலத்திலும் வரகுணன், சுந்தர
பாண்டியன் முதலிய பாண்டியமன்னர்கள் காலத்திலும்
வெட்டப்பெற்ற கல்வெட்டுக்கள். இவற்றால்
அறியப்படும் சிறந்த நிகழ்ச்சிகள். இத்தலம்
உய்யக் கொண்ட சோழவளநாட்டு, திரைமூர் நாட்டு
திருவிடைமருதூர் என வழங்கப்பெறுகிறது. பரகேசரி
வர்மனான முதல் இராஜேந்திரன் மூன்றாமாண்டில்
ஏகநாயகன் திருவாசலுக்கு விளக்கு ஏற்றி வர ஆடுகள்
அளித்தமை அறியப்படுகிறது1. இதனால் மகாலிங்க
சுவாமிக்கு ஏகநாயகர் என்ற பெயருண்மை அறியலாம்.
இத்தலத்து
எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்தர் ஆடல் விடங்க
தேவர் என்று அழைக்கப்பெறுகிறார்2. இத்தேவர்
இங்கநாடு பல்லவராயனால் பிரதிஷ்டை
செய்விக்கப்பெற்றவர். முதல் பராந்தகன்
முப்பத்தேழாம் ஆட்சியாண்டில் திருவாதிரை,
சதயம், அமாவாசை இந்த நாட்களைக்கொண்டாட
மான்யம் விட்டிருக்கிறான். திருவிடை மருதூர்
மூலஸ்தானம் தெற்குப் பக்கத்திலுள்ள பூர்ணகணபதி
கருப்பக் கிருகத்திற்கு 8 இலைக்காசு கொடுத்தான்3.
இதனால் மூலஸ்தானக் கணபதி பூர்ணகணபதி என
வழங்கப்பெற்றமை அறியலாம். தைப்பூச
விழாவைப்பற்றிச்4 சில கல்வெட்டுகள்
அறிவிக்கின்றன. மகாலிங்க சுவாமிக்குச்
செண்பகப்பூ நித்தியம் சாத்தி வருவதற்காகத்
திருவெண்காடு பிச்சனால் நிபந்தம்
அளிக்கப்பெற்றது5. சோழன் இராஜகேசரி வர்மன்
காலத்தில் (கி.பி. 985 -1113) 10-ஆவதாண்டில் 278-ஆம்
நாளில் அரசி பஞ்சவன் மாதேவியாரால்
உமாசகிதருடைய தங்க உருவம் அமைக்கப்பெற்றது6.
திருக்காமக்கோட்டமுடைய நாச்சியாருக்கு
இராஜகேசரிவர்மன் ஒன்பதாமாண்டில் (கி.பி.994)
நம்பிராட்டியார் பஞ்சமாதேவியாரால் ஒன்பது
கழஞ்சு பொன் அளிக்கப்பெற்றது7.
________________________
1 200 of 1907, 2 212 of 1907, 3
239 of 1907, 4 246, 248 of 1907, 5 247, 260 of 1907, 6 254 of
1907, 7 279 to 286 of 1907.
|