பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்143


திருவுருவம் முடிசாய்த்துச் செவி சாய்த்துக் கேட்கின்ற பாவனையில் அமைந்திருக்கிறது.

இறைவன் பெயர் சத்யவாகீசர்; இறைவியின்பெயர் சௌந்தர நாயகி. சத்தியலோகவாசியாகிய பிரமனும், வாகீசரும் பூசித்தமையால் சத்தியவாகீசர் என்ற பெயர் போலும். தீர்த்தம் கொள்ளிடநதி.

கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றியனவாக 1902-இல் படியெடுக்கப்பட்டவை பதின்மூன்று கல்வெட்டுக்களும், 1938-இல் எடுக்கப்பட்டவை ஆறும் உள்ளன. அவற்றில் ஏழு கல்வெட்டுக்கள் திருமால் கோயிலில் உள்ளவை. ஏனையவை சத்தியவாகீசரைப் பற்றியன. கல்வெட்டுகளில் இறைவன்பெயர் பிரமபுரீசுவரர் என வழங்கப் பெறுகிறது. மாறவர்மன் குலசேகரபாண்டியன், மூன்றாம் இராஜேந்திர சோழன், ஹொய்சள வீரராமநாததேவர், மதுரைகொண்ட பரகேசரிவர்மன், இராஜராஜதேவன் முதலியவர்கள் காலத்தனவாகக் காணப்படுகின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் நிபந்தம் அளிக்கப்பெற்றமையை அறிவிக்கின்றன.1

30. திருவையாறு

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். தஞ்சாவூர் கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இத்தலம் ஐயாறு, பஞ்சநதம், பூலோககயிலாயம் என வழங்கப்பெறும். ஐந்து தெய்விக ஆறுகள் தம்முட் கலப்பதால் வந்த பெயர் என்று நூல்கள் கூறும். ஐந்து ஆறுகளாவன: சூரியபுஷ்கரிணி, சந்திரபுஷ்கரிணி, கங்கை, பாலாறு, நந்திவாய்நுரை என்னும் நந்தி தீர்த்தம் என்பன.

கோயிலுக்குக் காவிரிக்கோட்டம் என்பது திருமுறைகளில் வழங்கும் பெயர், ‘காவிரிக்கோட்டத்து ஐயாறுடைய அடிகளோ’ என்பது அதற்குப் பிரமாணம். இதற்குக் காவிரிக்கரைக் கண்ணதாகிய ஐயாறு எனப் பொருள்காண்பாரும் உளர். சுவாமி அம்மன் சந்நிதிகள் கிழக்குப் பார்த்தவை. சோமாஸ்கந்தர் கோயில் தனியாக இருக்கின்றது. ஜபேசம் என்னும் முக்தி மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், உற்சவ

_________________________

1-595 to 601 of 1902.