பக்கம் எண் :

144தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


மண்டபம் முதலிய சிறந்த மண்டபங்கள் உள்ளன. ஆலயம் தருமை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது

இறைவன்பெயர் ஐயாறப்பர். செம்பொற்சோதீசுவரர் என்பது திருமுறைகளில் வழங்கும் பெயர். இன்றும் ஐயாறுடைய அடிகள், ஐயாற்றின் பெருமான் எனவும் அவை வழங்குகின்றன. புராணத்தில் கைலாயநாதர், ஜபேசர், பிரணதார்த்திஹரர் எனவும் வழங்கப் பெறுவர். இறைவிபெயர் அறம்வளர்த்தநாயகி, திரிபுரசுந்தரி, தருமாம்பிகை தருமசம்வர்த்தினி என வழங்கும். வல்லபை விநாயகர், ஓலமிட்ட விநாயகர், ஆதிவிநாயகர் முதலான விநாயக வடிவங்களும், வில்வேள் நாயனார் என்ற வில்லேந்திய சுப்பிரமணியர் வடிவமும் உள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தித் திருவுருவம் தனிச்சிறப்புடையது. திருவடியில் ஆமையை மிதித்திருப்பது அறிந்து இன்புறுதற்குரியது. இவருக்கு அரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தி என்பது பெயர். ஆட்கொண்டார் சந்நிதி மிக விசேஷமானது. எப்போதும் குங்குலியப்புகை கமழ்ந்து கொண்டேயிருக்கும்.

தீர்த்தங்கள் காவிரி, சந்திரபுஷ்கரிணி, சூரியபுஷ்கரிணி, தேனாமிர்த தீர்த்தம், நந்திதீர்த்தம் முதலியன. தலவிருட்சம் வில்வம்.

ஐயாறப்பர் ஆதிசைவ வேடந்தாங்கித் தன்னையே பூசித்துக் கொண்டார். இதனைத் திருவாசகம் "ஐயாறதனிற் சைவனாகியும்" எனக் குறிப்பிடுகிறது. இதனை ஆத்மபூஜை என்பர். திருநந்திதேவர் சிலாத முனிவர்க்கு மகனாக அவதரித்த தலம். அகத்தியர் பூசித்துக் கயிலை பெற்ற தலம். சுசரிதன் என்னும் அந்தணச் சிறுவன் இறுதியெய்தாத வண்ணம் இறைவன் ஆட்கொண்டார் திருமேனிதாங்கிக் காத்தனர்.

முதன்முதல் பிரியவிருதன் திருப்பணிசெய்தான். அடுத்துக் கரிகாலன் திருப்பணி செய்தான். அடுத்து வேங்கிநாட்டு விமலாதித்தன் இதனைப் புதுக்கினான். முதல் இராஜராஜன் மனைவி உத்தர கயிலாயத்தைப் புதுக்கி ஒலோகமா தேவீச்சரம் எனத் தன்பெயரை இட்டாள்.

சித்திரையில் திருவிழா நடைபெறுகிறது. அதில் 5-ஆம் திருநாள் ஆத்மபூஜை. சித்திரைப் பூர்ணிமையில் சப்தஸ்தானத்திருவிழா நடக்கும். நந்தியும், அவர் மனைவியான சுயம்பிரகாச அம்மையாருடன் எழுந்தருளுவர்.