பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்161


உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பூசிக்கப்பெற்று வருகிறது. சிவாலயத்துள்ளேயே ஆதிகேசவப்பெருமாள் சந்நிதியும் இருக்கிறது.

சுவாமி வேதநாதர். அம்மை இளமுலைநாயகி. தீர்த்தம் சேயாறு (வேததீர்த்தம்).

கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றிய கல்வெட்டுக்கள் 29 உள்ளன. அவற்றுள் இராஜாதிராஜன், குலோத்துங்கன், இராஜேந்திரன், பொத்தப்பிச் சோழன், இராஜராஜன்-1, 3, விக்கிரமசோழன் ஆகிய சோழ அரசர்கள் காலத்தனவும், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் காலத்தனவும், கோப்பெருஞ்சிங்கன் காலத்தனவும், இராஷ்டிரகூட கன்னரதேவன் காலத்தனவும் ஆக அமைந்துள்ளன.

இறைவன் பெயர் வேதபுரீசுவரர் எனவும், ஓத்தூர் உடைய நாயனார் எனவும் வழங்கும். கோயில்வழிபாட்டிற்கும் நிவேதனத்திற்கும், அர்ச்சகர்க்கும் நிலமளித்த செய்திகளும், பூந்தோட்டத்திற்கு நிலமளித்த செய்திகளும் அறிவிக்கப்பெறுகின்றன. விளக்கிற்காகப் பசுக்கள் வாங்கி விடப்பெற்றமையைத் தெரிவிக்கின்றன. சிறப்பாக, விளையாட்டாக வேட்டைக்குச் சென்ற ஒருவன் எய்த அம்பு குறிதவறி ஒரு மனிதன்மேல் பட்டுவிட, அதற்காகத் திருஓத்தூர் சபையாரைக் கூட்டி, குற்றத்தைக் கூறி, சபை விதித்தவண்ணம் குற்றத்தண்டமாகக் கோயிலுக்கு 16 பசுக்களை வாங்கிக் கொடுத்து விளக்கிடச் செய்தான்.1 விக்கிரமசோழன் (கி.பி. 1118-35) காலத்து வெள்ளம்புகுந்து விளைச்சலழிந்ததால் குடிகளுக்கு வரிகட்ட முடியாமல்போக இரண்டாயிரம் குழி நிலத்தை 25 காசிற்கும், 4450 குழி புன்செய்யை 20 காசிற்கும் கோயிலுக்கு விற்று இறையிலி செய்தான்2, மூன்றாம் குலோத்துங்கன் பொன் ஆபரணங்கள் அளித்திருக்கின்றான். அதேகோயிலில் சிதம்பரேசுவர ஆலயம் ஒன்று இருப்பதாக அறியப்படுகிறது3. கேதாரிநாதர் மடம் என்ற ஒன்று குறிப்பிடப் பெறுகிறது4.

46. திருஅம்பர்மாகாளம்

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். மயிலாடுதுறை திருவாரூர் வழியில் பூந்தோட்டத்திலிருந்து காரைக்கால் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

_____________________

1 77 of 1900, 2 87, 88, 3 100, 4 98 of 1910.