பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்175


57. திருப்பரங்குன்றம்

பாண்டிய நாட்டுத்தலம். மதுரைக்கு அருகில் மேற்குத் திசையில் உள்ளது. பேருந்துகள் பல உள்ளன.

இது முருகனது ஆறு படைவீடுகளில் ஒன்று. முருகன் தெய்வயானையைத் திருமணம் செய்துகொண்ட தலம். முருகன் வழிபட்ட தலம். சுவாமி பெயர் பரங்கிரிநாதர். அம்மை ஆவுடைநாயகி. தீர்த்தம் சரவணப்பொய்கை. மலைமேல் காசிதீர்த்தம் என்ற ஒன்று இருக்கிறது. அதில் பலரக மீன்கள் பார்ப்போர் கண்ணைக்கவரும். நக்கீரர் வாழ்ந்த நன்னகரம். இத்தலம் மதுரைக்குத் தென்மேற்கில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.

கல்வெட்டு:

இத்தலத்துக் கல்வெட்டுக்களாக செவல் பாதிரியார் குறிப்பவை பதினொன்று. ஆனால் அவைகள் தெளிவும் வரலாற்று விளக்கம் உடையனவும் அல்ல. கி.பி. 1843 இல் வீரசிம்மநாயுடு என்பவன் மரபில் வந்த மங்கம்மாள் கோயிலுக்குச் சிறிது தானம் வழங்கினாள். சுந்தரபாண்டியதேவன், வீரநாராயண குளத்திற்குக் கீழ்ப்புறமிருந்த அம்பாண்டியபுரமாகிய புளிங்குன்றூர் கிராமத்தைப் பூசைக்கும் பணிக்கும் அளித்தான். அதில் கடவுள் பெயர் சுந்தரபாண்டீசுவரமுடையார் என்று குறிக்கப்படுகிறது. முகம்மதிய அரசாங்கத்தில் திவானாயிருந்த ராஜகோபாலராயர் ஐரோப்பியர் படை மதுரையில் புகுந்து, கோயிலை அழித்து முன்னேறிக்கொண்டிருந்தபோது, வயிராவி முத்துக்கருப்பன் குமாரன் குட்டி என்பவன் எதிரிப்படைகளைத் தடுப்பதற்காகக் கோபுரத்திலிருந்து கீழே விழ, அவன் பரம்பரையினருக்கு இறையிலியாகச் சில நிலங்கள் அளித்த செய்தி அறியப்படுகிறது.

58. திருப்பழனம்

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். கும்பகோணம் - திருவையாறு பேருந்துச்சாலையில் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது.

இது திருவையாற்று ஸப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. அப்பூதி அடிகளுடைய அவதாரத் தலமாய திங்களூர் இதற்கு