பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்177


அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் 83. அவற்றால் அறியப்படும் கோயிலைப் பற்றிய உண்மைகள், கோயிலுக்கு விளக்கு எரிக்க ஆடும், பொன்னும், நிலமும் அளித்த செய்திகளாகும்.

சுந்தரபாண்டியத் தேவன் தன்னுடைய ஆட்சி ஒன்பதாம் ஆண்டில் தங்க ஆபரணங்கள் அளித்தான்1. குலோத்துங்கன் கருப்பக் கிருகத்துக்குப் பொன்வேய்ந்தான்2. சோமாஸ்கந்தர் கோயில் முன் மண்டபம், சிறைமீட்டான் திரிவிக்ரம உதயனால் கட்டப்பெற்றது3. தலவிநாயகருக்கு ஏகாம்பர உதயன் ஆட்சியில் நிலம் வழங்கப்பெற்றது4. இறைவன் திருப்பராய்த்துறை மகாதேவர், பராய்த்துறை பரமேசுவரன்5. என்று வழங்கப்பெறுகிறார். இத்தலம் உத்தமசீலிச் சதுர்வேதி மங்கலத்துத் திருப்பராய்த்துறை என்று குறிக்கப்படுகிறது. இங்கே தக்ஷிணாயன புண்ணிய காலத்திலும் சங்கராந்தியிலும் நீராட்டு விழா நடைபெற்றதாகத் தெரிகின்றது.

60. திருநாகைக் காரோணம்

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். தஞ்சை - நாகூர் இருப்புப்பாதையில் இரயில் நிலையம். சென்னை, கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. நாகை மாவட்டத்தின் தலைநகர். இது சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்று. அதிபத்தநாயனார் அவதரித்த நம்பியாங்குப்பம் திருக்கோயிலுக்கு வடகிழக்கில் 1.5 கி.மீ தூரத்தில் இருக்கிறது. சிவபெருமான் புண்டரீக மகரிஷியை உடலோடு ஏற்றுக்கொண்ட தலமாதலின், காரோணம் எனப் பெயர் பெற்றது. ஆதிசேடன் பூசித்த தலமாதலின் நாகை எனப் பெயர் பெற்றது. அவன் பூசித்த திருக்கோயில் மேற்கே 1.5 கி.மீ. தூரத்தில் நாகநாதர் கோயில் என வழங்குகிறது. முத்திமண்டபம் என்ற ஒன்று இங்கு உள்ளமை தனிச்சிறப்பு.

இறைவன் பெயர் காயாரோகணேஸ்வரர். ஆதிபுராணர் என வழங்குதலும் உண்டு. அம்மை கருந்தடங்கண்ணி. வடமொழியில் நீலாயதாக்ஷி என வழங்குவர். தலவிருட்சம் மா. விநாயகர் மாவடி விநாயகர், நாகாபரணப்பிள்ளையார். தியாகர் திருவுரு தனியே உள்ளது. பாராவாரதரங்க நடனம். தீர்த்தம் புண்டரீக தீர்த்தம். காக தீர்த்தம் முதலியன.

_________

1 267 of 1903, 2 268 of 1903, 3 280 of 1903, 4 282 of 1903, 5 570 of 1903, 566 of 1903.