பக்கம் எண் :

178தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


இது கீழ்க் கடற்கரையோரமாக உள்ள தலம்.

கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றிய கல்வெட்டுக்கள் மிகச் சிலவே. இவ்வாலயத்தைப்பற்றியனவாக ஒன்றும் இல்லை. நாயக்கமன்னர்கள், ஒல்லாந்து நாட்டவருக்கு இந்நகரை வழங்கிய வரலாற்றுக் குறிப்பு இதில் காணப்பெறுகிறது.

61. திருநல்லூர்

சோழ நாட்டுக் காவிரித் தென் கரைத்தலம். சுந்தரப் பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ளது. பேருந்து வழி உள்ளது. இத்தலம் கோச்செங்கட் சோழனால் திருப்பணி செய்யப் பெற்ற மாடக்கோயிலுள் ஒன்றாக விளங்குவது. திருநாவுக்கரசு சுவாமிகள் திருச்சத்தி முற்றத்திலே ‘பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை’ என்று விண்ணப்பஞ்செய்ய, இறைவன் ‘நல்லூருக்குவா! உன்னுடைய நினைப்பை முடிக்கின்றோம்’ என்று அருள இங்கு எழுந்தருளினார். திருவடி சூட்டப்பெற்றார். அதனை அமைத்துத் திருத்தாண்டகத்து ஓதுதலைக்காண்க.

பழையாறையில் அவதரித்த அமர்நீதிநாயனார் இத்தலத்தில் திருமடங்கட்டிச் சிவனடியார்களுக்குக் கந்தை கீழ்க் கோவணங்கொடுத்துவந்தார். மறைந்துபோன சிவபெருமானது கோவணத்திற்காக தானும் உரிமையும் உடைமையுமெல்லாம் துலை ஏறி, அத்துலையே விமானமெனக்கொண்டு சிவபதம் அடைந்தார். இதனை அப்பர் சுவாமிகள் "நாட்கொண்ட" என்ற பாடலில் (7ஆம் பாட்டு) விளக்கி அருளுகிறார்கள்.

பிருங்கி வண்டுரூபமாகப் பூசித்ததால் திருமேனி முழுவதும் துளைகள் உள்ளன. அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டிய தலமாதலால் அகத்தியலிங்கமும், கல்யாண சுந்தரக்கோலமும் கருப்பக் கிருகத்தில் இருக்கின்றன. சுவாமி பொன்வண்ணத் திருமேனியோடு விளங்குகிறார். ஒருநாளைக்கு ஐந்து வர்ணமாய்த் தோன்றுவதாக ஐதீகம். இங்கு சாலிக்கிராமத்தால் செய்யப்பெற்ற சுப்பிரமணியர் விக்கிரகம் ஒன்றுண்டு. சுவாமி பெயர் பெரியாண்டேசுவரர், கல்யாண சுந்தரேசுவரர், பஞ்சவர்ணேசர் என்பன. இறைவிபெயர் பர்வத சுந்தரி, கல்யாணசுந்தரி என்பன. தீர்த்தம் சப்தசாகர தீர்த்தம்.