பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்181


சோழ தேவனுடைய 47 ஆம் ஆண்டுக் கல்வெட்டும் கனகசபையையும் திருமூலட்டானத்தையும் பிரிக்கும் சுவரில் உள்ளன.

கனகசபையைச் சுற்றியுள்ள பிராகாரம் விக்கிரமசோழன் திருமாளிகை என்றும், திருமூலட்டானத்தைச்சேர வருகின்ற இரண்டாம் பிராகாரம் குலோத்துங்கசோழன் திருமாளிகை என்றும், அதற்கும் வெளியிலுள்ள மூன்றாம் பிராகாரம் இராசாக்கள் தம்பிரான் திருமாளிகை என்றும் வழங்கப்பட்டன. இவற்றுள் குலோத்துங்க சோழன் திருமாளிகை என்ற பெயரும் விக்கிரமசோழன் திருமாளிகை என்ற பெயரும் மேற்குறித்த சுவரிலுள்ள கல்வெட்டுக்களிலேயே காணப்படுகின்றமையின், விக்கிரமனே தன் தந்தையாகிய குலோத்துங்கன் பெயரால் உட்பிராகாரத்தையும், தன்பெயரால் இரண்டாம் பிராகாரத்தையும் செய்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.

சம்பந்தர் முதலிய மூவர் காலத்திலேயே இத்தலம் சிறப்புற்றிருக்கவும், அவர்கள் காலத்திய பல்லவ வேந்தர்களின் கல்வெட்டொன்றும் இதில் காணப்பெறாமை குறிப்பிடத்தக்கது.

சிதம்பரத்தைப்பற்றிய கல்வெட்டுக்கள் 271 உள்ளன, அவைகளுள் பெரும்பாலன கோப்பெருஞ்சிங்க அரசனைப் பற்றியும், ஜடாவர்மன் சுந்தரபாண்டியனைப் பற்றியும் கூறுவன. இராசேந்திரன் முதல் இராஜராஜன் III முடிய உள்ள பலருடைய கல்வெட்டுகளும், விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுக்களும் நாயக்க மன்னர்களின் கல்வெட்டுகளும் இருக்கின்றன.

இவைகளுள் பெரும்பாலனவற்றில் நந்தவனப் பணிகளே அறிவிக்கப்பட்டுள்ளன. மிகச்சிலவற்றுள் பூசை வழிபாட்டுக்குரிய நிபந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அறச்சாலைகளைப் பற்றியும், அக்கிரகாரங்கள் அமைப்பதைப்பற்றியும், திருப்பாவாடை போடு வதைப்பற்றியும் தெரிவிக்கின்றன சில கல்வெட்டுக்கள். விக்கிரம சோழனது காலம்வரையில் கோயிற் சார்பாக நடைபெற்ற சாசனங்களெல்லாம் திருப்புலியூர்ச் சண்டேசுவர தேவநாயனார் பெயராலேயே நடைபெற்றுவந்தன. இவன் காலத்துக்குப் பிறகு கோயில் கண்காணிப்புச் சபையின் பெயராலேயே நடைபெற்று வந்திருக்கின்றன.

அரசாங்கத் தலைமை அதிகாரிகளும், உள்நாயகத்தார்களும், சீகாரியஞ் செய்வார்களுமாகப் பலர் மேற்கூறிய சபையின் அங்கத்தினர்களாக இருந்து, கோயிற்காரியங்களை மேற்பார்வை செய்து வந்துள்ளார்கள்.