பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்183


இவ்வுருவங்களும் மேல்புறச் சுவரில் 1க்ஷேத்ரபாலப் பிள்ளையார், கங்காதேவி, தன்வந்திரி, திரிபுரசுந்தரி, சுக்கிரன், வைஜயன், நாகன். யமுனை, பத்ரகாளி, ஆதிசண்டீசர் இவ்வுருவங்களும், தென்சுவரில் புதன், நிருதி, ஞானசக்தி, அக்னிதேவன். இவ்வுருவங்களும் இருப்பனவாக அறிவிக்கிறது. 2தேவாரம் பாடிய மூவர் முதலிகளாகிய ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் தனித்தனியே ஆலயங்கள் இருந்தனவாகக் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன.

வடக்குக் கோபுரத்தை யடுத்துத் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற ஒன்று குறிப்பிடப்படுகிறது. இதில், திருத்தொண்டத் தொகையில் பாராட்டப்பெற்ற தனிஅடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மருமாக உள்ள பெருமக்களில், தனியடியார்களுக்குத் தனித்தனித் திருவுருவம் அமைக்கப்பெற்றமை போலத் தொகையடியார்களாகிய கூட்டத்தினருக்குத் தனித்தனி உருவம் அமைக்க முடியாமையின் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு இலிங்கத் திருமேனியாக எழுந்தருளச் செய்திருக்கிறது. முத்தியடைந்த பெருமக்களை உருவம் தெரிந்தால் உருவமமைத்தும், உருஅமைக்க முடியாததற்குச் சிவலிங்கந் தாபித்தும், அதுவுமில்லையானால், பீடங்கள் அமைத்தும் வழிபடலாம் என்று ஆகமங் கூறுகிறது. ஆதலால், உருவம் அமைக்கமுடியாத தொகையடியார்களைச் சிவலிங்கத் திருமேனி வாயிலாக வழிபடவேண்டி, திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற இக்கோயிலை அமைத்து உள்ளார்கள். அன்றியும் தொண்டத்தொகை பாடிய சுந்தரர் வடக்குவாயில் வழியாக வந்தாரென்பதும் ஊன்றிக் கருதத்தக்கது. இவ்வாலயம் நவலிங்கம் கோயில் என இப்பொழுது வழங்கப்படுகிறது.

மூர்த்திகளின் திருநாமங்கள்: பொன்னம்பலக் கூத்தன் பொன்னம்பலநாதன், 3ஆனந்த தாண்டவப் பெருமாள் நாயனார், 4அழகிய திருச்சிற்றம்பலமுடையார், 5ஆளுடைய நாயனார், 6சிதம்பரேசுவரர், தில்லைநாயகத் தம்பிரானார் முதலாகிய பலபெயர்களால் குறிக்கப்படுகிறார். திருச்சிற்றம்பலக்கோவையில் மாணிக்கக் கூத்தன் என்றும் இறைவன்பெயர் வழங்கப்படுகின்றது. அதற்குப் பேராசிரியர் மாணிக்கம்போலும் கூத்தினை உடையான் என்று உரை

________

1 இது தல விநாயகராகிய கற்பக விநாயகரைக் குறிப்பதாகும். 2 S.I.I. 1916 of 17, 48. 3 A.R. 622 of 1888. 4 A.R. 352 of 13, 5 E.P. 1 of 1914, 6 S.I.I. 280 of 13.