பக்கம் எண் :

196தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


ஏகாம்பரநாதன் சில கிராமங்களை இறையிலிசெய்தான். தேவராஜ மகாராஜா சகம் 1356இல் 18-ப் பற்றுச்சபையாரால் வீதிகளுக்கு இறையிலிசெய்து திருமடை விஜயத்திற்காகவும் நல்ல பெண்ணாகடத்துப் பெருமாளுக்கும் திருமாறன் பாடியிலுள்ள தாகந்தீர்த்தருளிய நாயனாருக்கும் விழாசெய்வதற்காக, பெரியநாட்டான் இறையிலி செய்தார். விக்கிரமன் காலத்தில் அமாவாசையில் சுவாமி உலாவரவும் விளக்குக்கு நெய் இடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏனையவை விளக்கு முதலானவற்றிற்கு நிலம், பொன், பசுக்கள், நெல் முதலியன அளித்தமையைக் குறிப்பிடுகின்றன.

69. திருப்பல்லவனீச்சரம்

சோழ நாட்டுக் காவிரி வடகரைத்தலம். பூம்புகாரில் உள்ளது. மயிலாடுதுறை, சீகாழி நகர்களிலிருந்து பேருந்து வசதி உண்டு. இத்தலம் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் எனப் பெயர் பெறும். பல்லவராசன் பூசித்துப் பேறுபெற்ற தலம். இயற்பகை நாயனாரும், பட்டினத்துப் பிள்ளையும் அவதாரம் செய்தருளிய தலம்.

இறைவன் பல்லவனேசுவரர்; இறைவி சௌந்தரநாயகி; தீர்த்தம் காவிரி சங்கமதீர்த்தம்.

70. திருஈங்கோய்மலை

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். திருச்சிராப்பள்ளி - நாமக்கல் பேருந்து வழியில் அகண்ட காவிரியின் வடகரையிலுள்ளது. தற்காலம் திருவிங்கநாதமலை என மருவி வழங்குகின்றது. அகத்தியர் ஈ உருவாய்ப் பூசித்துப் பேறு பெற்றமையின் இப்பெயர் எய்தியது.

காவிரித் தென்கரையில் உள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும் இத்தலத்தை மாலையிலும், ஒரேநாளில் வழிபடுதல் மிக்க பயனைத் தரும். ‘காலைக் கடம்பர் மத்தியானச் சொக்கர் மாலைத் திருவிங்கநாதர்’ என்பது பழமொழி. கோயில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.

இறைவன் மரகதாசலர்; இறைவி மரகதவல்லி; தீர்த்தம் அமிர்த தீர்த்தம்.