பக்கம் எண் :

 14. திருக்கொடுங்குன்றம்381



147. மரவத்தொடு மணமாதவி

மௌவல்லது விண்ட

குரவத்தொடு விரவும்பொழில்

சூழ்தண்கொடுங் குன்றம்

அரவத்தொடு மிளவெண்பிறை

விரவும்மலர்க் கொன்றை

நிரவச்சடை முடிமேலுடன்

வைத்தானெடு நகரே. 7

148. முட்டாமுது கரியின்னின

முதுவேய்களை முனிந்து

குட்டாச்சுனை யவைமண்டிநின்

றாடுங்கொடுங் குன்றம்

ஒட்டாவரக் கன்றன்முடி

யொருபஃதவை யுடனே

பிட்டானவ னுமையாளொடு

மேவும்பெரு நகரே. 8

__________________________________________________

நில்லார் தீயோசைகேட்டு அஞ்சிஓடித் தாணிழல் செல்லும் அன்பரை நினைவூட்டும் நிகழ்ச்சி. அம்மான் - தலைவன். உள்கி - தியானித்து.

7. பொ-ரை: கடம்பு, குருக்கத்தி, முல்லை ஆகியவற்றின் நாள் அரும்புகள் குரவமலர்களோடு விண்டு மணம் விரவும் பொழில் சூழ்ந்த தண்ணிய கொடுங்குன்றம், அரவு, வெள்ளிய இளம்பிறை, மணம் விரவும் கொன்றை மலர் ஆகியவற்றை நிரம்பத் தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகராகும்.

கு-ரை: மரவம் - கடம்பு. மாதவி - குருக்கத்தி. மௌவல் - முல்லை. நிரவ - நிரம்ப. ஒன்ற என்றுமாம்.

8. பொ-ரை: யானைக் கூட்டங்கள் யாரும் தடுப்பார் இன்றி முதிய மூங்கில்களை உண்டு வெறுத்துப் பிறரால் அகழப்படாது இயற்கையிலேயே ஆழமாக உள்ள சுனைகளில் இறங்கிநின்று நீராடும் கொடுங்குன்றம், தன்னோடு மனம் பொருந்தாது கயிலை மலையை எடுத்த அரக்கனாகிய இராவணனின் முடியணிந்த பத்துத் தலைகளையும் அடர்த்து ஒடித்தவனாகிய சிவபெருமான் உமையம்மையோடு மேவும் பெருநகராகும்.