பக்கம் எண் :

 28. திருச்சோற்றுத்துறை487


28. திருச்சோற்றுத்துறை

பதிக வரலாறு:

திருக்கண்டியூரை வணங்கிய திருஞானசம்பந்தப் பிள்ளையார், வெண்ணீற்றப்பர் சோற்றுத்துறையை வணங்கத் திருவுளங்கொண்டு எழுந்தருளுகின்றபோது, வழிநடையில், ‘செப்பநெஞ்சே’ என்னுந் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்கள். இப்பதிகத்தைச் சேக்கிழார் ‘ஒப்பில் வண்தமிழ் மாலை’ எனச் சிறப்பிக்கின்றார். இப்பதிகத்தில் ‘ஒளிவெண்ணீற்றப்பர் உறையும் செல்வம் உடையார்’ என இறைவன் திருநாமமாகிய தொலையாச் செல்வர் என்பது தோற்றுவிக்கப்படுகிறது.

பண் : தக்கராகம்

பதிக எண்: 28

திருச்சிற்றம்பலம்

294. செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமா னொளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1

__________________________________________________

1. பொ-ரை: நெஞ்சே, முறையான சிற்றின்பத்தைத் தன் முனைப்போடு "யான் துய்ப்பேன்" என்னாது, "அருளே துணையாக நுகர்வேன்" என்று கூற, இறைவர் அதனை ஏற்பர். அத்தகைய பெருமானார், ஒளி பொருந்திய திருவெண்ணீறு அணிந்த மேனியராய்த் தலைவராய் விளங்கும், திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.

கு-ரை: நெஞ்சே! நெறிகொள் சிற்றின்பம் துப்பன் என்னாது அருளே துணையாகச் செப்ப ஒப்பர் ஒப்பர் என முடிவுசெய்க. நெறிகொள் சிற்றின்பம் - இல்லறத்தானுக்கு ஓதியமுறைப்படி நுகரப்படும் சிற்றின்பம். துப்பன் - நுகர்வோன். பொறிகளான் நுகரப்படும் சிற்றின்பத்தை நுகருங்கால் தன்முனைப்பின்றி அவனருளே துணையாக நுகர்கின்றேன் என்று புத்திபண்ணிச் சொல்ல அவர் நம் சிறுமைகண்டு இகழாது ஒப்புவர் ஒப்புவர் என்றவாறு. ‘ஒளிவெண்ணீற்று அப்பர்’ என்பது தொலையாச் செல்வர் என்னும் இறைவன் திருநாமத்தை நினைவூட்டியது. தொலையாச் செல்வம் -