வாதலின் அடையுமிடமும்
அவன் அடிகளே ஆயின என்பது.
83-8. கொலைஆர்மழு - இது படைக்கலம்
என்ற பொதுமை பற்றி வந்த அடை; இறைவன் மழு
யாரையும் கொலை செய்தல் இல்லையாதலின்.
கோலச்சிலை - அழகுக்காகத்
தரிக்கப்பட்டவில்.
105-3. வெள்ளம் ஓர்வார் சடைமேல்
கரந்திட்ட - வானுலகன்றித் தரணி தனக்கு இடமாதல்
தகாது எனத் தருக்கி வந்த கங்கையை ஒரு சடைக்கும்
காணாது என்னும்படி தருக்கடக்கி இருக்கும் இடமும் தெரியாதபடி
மறைத்த. கரந்திட்ட என்றது மறைத்தவன் வேண்டும்போது
வெளிப்படுத்தும் வன்மையும் உடையவன் என்பது தோன்ற
நின்றது.
110-7. முனிவரொடு அமரர்கள் முறை வணங்க
- முனிவர்கள் வணக்கம் உலகு உய்ய வந்த நிஷ்காமிய
வணக்கம். தேவர்கள் வணக்கம் அசுரர் அழியத்
தாம்வாழவேண்டும் என்னும் காமிய வணக்கமாதலின்
அவர்கள் முன்னும் தேவர்கள் பின்னும் வணங்க.
113-2. அமரர்க்கும் முனிவர்க்கும் சேயவன்
- அமரர்கள் போகிகளாகவும் முனிவர்கள் மனன சீலர்களாகவும்
இருத்தலின் அவர்களுக்குச் சேயவன்; அவர்களுக்குச்
சேயவன் எனவே, ஞானிகளுக்கு அண்ணியன் என்பதாம்.
123-4. முடிமிசை மனமுடையவர் - கங்கையோ
செந்தழல் போன்ற சடையின் தீயை அவிக்க
வருவதுபோலப் பெருகிக்கொண்டு இருக்கிறது. அக்கங்கையில்
நனைந்த அரவமும் நம்மால் விழுங்கத்தக்கது மதி என்ற
நினைவோடு வருகிறது. ‘ஆதலால்’ இவை
தருக்கும் பகையும் மாறித் தத்தம் எல்லையில் ஒடுங்க
இறைவன் எப்போதும் தலைமேல் சிந்தையனாக உள்ளான்
என்ற நயம் தோன்றக் கூறியது.
இவ்வாறே 124-9,11 முதலியனவும்
நயம் சிறந்த உரைப்பகுதிகளைக் கொண்டிருப்பதனைக்
காணலாம்.
|