பக்கம் எண் :

116

இவ்வூர்ப்பதிகத்தில்,

“தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
 நீரினின்றடி போற்றி நின்மலக் கொள்ளென வாங்கே
 ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்”

எனவும், திருஞானசம்பந்தப்பெருமான்,

     “ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே”

எனவும் சேக்கிழார்பெருமான், ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணத்தில்,

“வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்
 கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற
 அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி
 தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்”

எனவும், போற்றுவாராயினர்,

     தலத்தைப் பற்றிய நூல்கள்: கச்சியப்பமுனிவர் இத்தல புராணத்தையும்
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அகிலாண்ட நாயகி மாலையையும்
பாடியுள்ளனர். இவைகள் இரண்டும் அச்சேறி வெளிவந்துள்ளன.

     தலத்தின் பெருமையை உணர்த்தும் புராணப்பாடல் ஒன்று
பின்வருமாறு:-

“மேதகைய பயன்விழைவோர் ஞானதலத்
     துறைகுவது மேவாதாயின்
 ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே
     லுரைப்பக்கேட்க
 காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங்
     கடந்துமேலாம்
 போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை
     பொலங்கொம்பன்னாய்.”

   -திருவானைக்காப் புராணம் - தலவிசேடப் படலம்.