பக்கம் எண் :

118

பிராகாரத்து மதிற்சுவரைத் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான்.

     ஹொய்சல அரசனான வீரசோமீசுவரன் (சோழநாட்டில்)
திருவரங்கத்துக்கு வடக்கே 8 கி. மீ. தூரத்தில் உள்ள கண்ணனூர்க்
கொப்பத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் சிறந்த
சிவபக்தன் ஆவான். ஆதலின், திருவானைக்கா கோவிலின் கிழக்குக்
கோபுரமான எழுநிலைக் கோபுரத்தைக் கட்டுவித்தான். வீரசோமீசுவரன்
திருநாள் என்று தன் பெயரால் இத்திருக்கோயிலில் ஒரு விழா
நடத்திவந்தான். வட திருவானைக்காவில் தன் பாட்டனாகிய பாலாலன் II
என்பவன் பெயரால் வாலால ஈசுவரத்தையும், தன் பாட்டியாராகிய பத்மலா
தேவியின் பெயரால் பதுமலீசுவரத்தையும் எடுப்பித்துள்ளான். இந்த வீர
சோமீசுவரனது தாயார் கல்லலா தேவியார் ஆவார். இவரது மேன்மையின்
பொருட்டுக் கண்ணனூரிலுள்ள பாலீஸ்வரம் உடையார்க்கு இந்த அரசன்
நிபந்தம் அளித்துள்ளான். இக்கோயிலும் இவனால் எடுப்பிக்கப் பெற்றதாகும்.
இந்த வீர சோமீகவரனது இருபத்திரண்டாவது ஆட்சியாண்டில்
திருவானைக்கா கோயில் மூன்றாவது பிராகாரத்தின் வடபக்கத்தில்
கல்வாக்கூர் தியாகப் பெருமாள், தியாகவிநோதீசுவரம் என்னும் கோயிலைக்
கட்டியுள்ளனர். இவைபோன்று ஹொய்சல அரசர்களின் வரலாறுகள்
பலவற்றை அறிதற்கு இக்கோயில் ஒரு சிறந்த பொக்கிஷமாக
விளங்குகின்றது.

     மாறவர்மன் சுந்தரபாண்டியன் பிறந்த நாள் ஆவணி மாதத்து
அவிட்டமாகும். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் I பிறந்தநாள் சித்திரை
மாதத்து மூலநட்சத்திரமாகும். இச்செய்திகளை இவர்கள் இத்திருவானைக்கா
கோயிலுக்கு அளித்துள்ள நிபந்தங்கள் அறிவுறுத்துகின்றன.

     சோழமன்னர்கள் இக்கோயிலைப் பெரிதும் போற்றி வந்தனர்.
திருபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழதேவன் (இவனே
இக்கல்வெட்டில் கோனேரின்மை கொண்டான்) என்பவன் நித்த விநோத
வளநாட்டு வில்லவநல்லூரில் இருபத்தைந்து வேலி நிலத்தைத் தன்
அத்தையாகிய திருப்பெரிய தேவியார் பேரால் திருவானைக்காவுடைய
சிவபெருமானுக்குத் திருநாமத்துக்காணியாக இறையிலிசெய்து
கொடுத்துள்ளான். திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் இருபதாம்
ஆண்டுக் கல்வெட்டினால் இக்கோவிலுக்கு இருபது காவலாளிகள்
இருந்தனர் என அறிகின்றோம். இக்கல்வெட்டில் பிணைத்தீட்டு (ஜாமீன்)
என்ற பெயர் உளது.