பக்கம் எண் :

121

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இத்தலத்திற்குப் புராணம்
பாடியுள்ளார். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை உலாவைப்
பாடியுள்ளார். இவைகள் அச்சிடப்பெற்றுள்ளன. இவைகளேயன்றி, மகா
மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் இத்தலமான்மியத்தை
உரைநடையில் எழுதியிருக்கிறார்கள்.

     “திருவிடைமருதூர்த் தெருவழகு” என்னும் உலகவழக்கு இவ்வூர்த்
திருவீதிகளின் சிறப்பைப் புலப்படுத்துவதாகும். இப்பதிக்குத்
திருஞானசம்பந்தரது பதிகங்கள் ஆறும், திருநாவுக்கரசரது பதிகங்கள்
ஐந்தும், சுந்தரமூர்த்தி நாயனாரது பதிகம் ஒன்றும் ஆகப் பன்னிரண்டு
பதிகங்கள் இருக்கின்றன.

கல்வெட்டு: 1

     மதுரை கொண்ட கோப்பரகேசரி பன்மராகிய முதற்பராந்தக சோழன்
(கி.பி. 907-948) இரண்டாம்பராந்தக சோழனது மகனாகிய ஆதித்த கரிகாலன்,
முதலாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலங்களில் இக்கோயிலில்
பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இவ்வூரைத் திருவிடைமருதில்,
திருவிடைமருது எனக் குறிப்பிடுகின்றன. முதலாம் இராஜராஜன் காலத்தில்
இது ஒரு நகரமாக விளங்கியிருந்தது.

     இச்செய்தி அம்மன்னனது ஆறாம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற
“திரு இடைமருதுடையார் ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றாயிலுடையாரும்,
தேவகன்மிகளும், சபையும், திருவிடைமருதில் நகரமும் இருந்து நம்
பிராட்டியார் ஸ்ரீ பஞ்சவன் மாதேவியார் ஆழ்வாரைத் திருவடி தொழ
வந்தருளினார்” என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.
முதற் குலோத்துங்க சோழன் காலத்தும், அவனுக்குப் பிற்பட்டார் காலத்தும்
பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டுக்கள் இவ்வூரைத் திருவிடைமருதூர்
என்னும் பெயரால் குறிப்பிடு்கின்றன. எனவே மிகப் பழங்காலத்தே இது
ஒரு நகரமாக விளங்கியிருந்த செய்தி புலப்படுகின்றது.


     1இக்குறிப்புக்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சிப்
புலவர் திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்கள் எழுதி உதவியது.

     See the Annual Reports on South Inidan Epigraphy for the
years 1895-1907, No. 130-159 and 193-313;

     See also South Indian Inscriptions, Volumes. 88