|
சுந்தரபாண்டிய
தேவர் இரண்டாவது ஆண்டில் பூந்துறை நாட்டார்கள்
திருப்பாண்டிக் கொடுமுடி நாயனாருக்கு வேம்புரியான கண்டியதேவ
நல்லூரைத் தேவதானமாகக் கொடுத்துள்ளார்கள்.
64.
திருப்பாதிரிப்புலியூர்
பாதிரி
மரத்தைத் தலத்துக்குரிய மரமாகக் கொண்டமையாலும்,
புலிக்கால் முனிவரால் (வியாக்கிரபாதரால்) பூசிக்கப் பெற்றமையாலும் இது
இப்பெயர் பெற்றது. திரு - அடைமொழி.
இது
திருப்பாதிரிப்புலியூர் என்னும் தொடர்வண்டி நிலையத்திற்கு
அருகில் இருக்கிறது. கடலூர் (புதுநகர்) என இவ்வூர் வழங்குகிறது.
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்தும் கடலூர் வரப் பேருந்துகள்
உள்ளன. இது நடுநாட்டுத்தலங்களுள் ஒன்றாகும்.
இறைவர்
திருப்பெயர் தோன்றாத்துணைநாதர். திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாயிருந்தனன் தன்னடியோங்களுக்கே என்ற இத்தலத்து
முதற்பதிகத்திலுள்ள அப்பர்பெருமானின் திருவாக்கு இதற்குச் சான்றாகும்.
இறைவியார் திருப்பெயர் பெரியநாயகி அம்மை.
தலவிருட்சம்
பாதிரி. இதை வடமொழியில் பாடலம் என்பர்.
தீர்த்தம்
- கெடிலநதி. இது தென்திசைக் கங்கை என்று
பாராட்டுப்பெற்றுள்ளது.
திருநாவுக்கரசர்
பெருமானைச் சமணர்கள் கல்லில் கட்டிக் கடலில்
தள்ள, அப்பொழுது அவர் சொற்றுணை வேதியன் எனத் தொடங்கும்
நமச்சிவாயப் பதிகத்தை ஓதிக் கரையேறப்பெற்றதால், அவ்வூர் இப்பொழுது
கரையேறவிட்ட குப்பம் என்று வழங்கப் பெறுகின்றது. சுவாமிகள் கரையேறி
இப்பதிக்கு முதலில் வந்தபோது ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் பதிகம்
பாடப்பெற்றது. மங்கண முனிவர் என்பவர் முடங்கிய காலுடைய முயல்
வடிவமாகச் சாபமிடப் பெற்றார். அவர் இத்தலத்து இறைவரைப் பூசித்துச்
சாபநீக்கம் பெற்றார். இச்செய்தி முன்னநின்ற முடக்கான் முயற்கருள்
செய்து என்னும் இக்கோயிலுக்குரிய திருஞானசம்பந்தப் பெருந்தகையாரின்
திருவாக்கால் புலப்படுகின்றது. இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம்
ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள்
இருக்கின்றன. சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்
|