பக்கம் எண் :

224

குறிப்பிட்டிருக்கும் கோயில் இப்பாதிரிப்புலியூர்க் கோயில் என்பதை
மேற்கண்ட கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன.

     ஞாழல் என்பதற்குப் புலிநகக்கொன்றை என்ற பொருள்
உண்டாயினும் அதைத் தலவிருட்சமாகக் கொள்ளுதற்கில்லை. இவ்வூர்க்குரிய
தலவிருட்சம் பாதிரிமரமாதலால் பாதிரிப்புலியூர் என்று பெயர்பெற்றது.
மேலும் ஒரு ஊருக்கு இரண்டு தல விருட்சங்கள் கிடையாதென்பதையும்
உய்த்துணரவேண்டும், பாதிரி என்ற சொல் தேவாரத்தில் வருவதால் அதுவே
தலமரமாதல் வேண்டும்.

     இக்கோயில் கல்வெட்டுக்கள் நுந்தாவிளக்கினுக்கும், திருவமிர்துக்கும்,
பூந்தோட்டத்திற்கும் நிவந்தங்கள் கொடுத்த செய்திகளைக் குறிப்பிடுக்கின்றன.

     “திருநட்டக்கணப்பெருமக்கள் வழிகொடுத்த தோட்டம்”
“திருவுண்ணாழிகைப் பெருமக்களோம் திருவமிர்துக்கு வேண்டும் முதல்
இவரிடைப்பெற்றோம்” என்னும் கல்வெட்டுத் தொடர்கள் திருநட்டக்கணப்
பெருமக்களும், திருவுண்ணாழிகைப் பெருமக்களும் இக்கோயில்
நி்ர்வாகிகளில் சிலர் என்பதைக் குறிப்பனவாகும்.

     இவ்வூர்க் கல்வெட்டுப் பாடலில் திருநாவுக்கரசுப் பெருந்தகையார்
பரசமய கோளரி மாமுனிவர் என்னும் ஒருவரால் கூறப்பெற்றிருப்பதோடு
அவர்மீது புராணம் இயற்றிய புலவர்க்கு இரண்டு மாநிலம் இறையிலி யாகக்
கொடுத்த செய்தி குறிப்பிடப் பெற்றுள்ளது

     கன்னி வன புராணமும், திருப்பாதிரிப்புலியூர் நாடகமும் புரசமய
கோளரி மாமுனி என்பவரால் இயற்றப்பட்டவை. இச்செய்தி
முதற்குலோத்துங்க சோழதேவரின் (கி. பி. 1070 முதல் 1120 வரை)
நாற்பத்தொன்பதாம் ஆண்டில் (கி. பி. 1119,) இற்றைக்கு எண்ணூற்றெழுபத்-
தெட்டு ஆண்டிற்கு முன்னதான கல்வெட்டில், குறிப்பிடப்படுகிறது. மேலும்
முதற்குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டுப் பாடல் ஒன்று இக்
கோயிலுக்குக் கன்னிவன புராணமும், நாடகமும் பாடிய நாவலர் ஒருவர்க்கு
நிவந்தம் அளித்ததையும் குறிப்பிடுகின்றது. வீர விருப்பண்ண உடையார்
கல்வெட்டு1 இவ்வூரில் புஷ்பகிரிமடம் ஒன்று இருந்ததைப்பற்றித்
தெரிவிக்கின்றது.


     1See the Annual Reports on South Indian Epigraphy for the
year 1928, No. 42-108.