பக்கம் எண் :

225

                   65. திருப்புகலூர்

     சிவபிரானிடத்திற் புகலடைந்த காரணம் பற்றிய பெயர் என்பர்.
திருஞானசம்பந்தர் அருளிய பதிகமாகிய க்ஷேத்திரக் கோவையில்
“துலைபுகலூ ரகலா திவை காதலித்தா னவன் சேர்பதியே” என்று
அருளியிருப்பதால், ஏதோ வரலாற்றை உட்கொண்டு அவ்வாறு
கூறியிருக்கவேண்டும். துலைபுகல் என்பது துலாபாரம் புகுதல் என்று
பொருள்படும்.

     இது மயிலாடுதுறை - பேரளம் தொடர்வண்டிப் பாதையில் உள்ள
நன்னிலம் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே 6. கி. மீ. தூரத்தில்
இருக்கின்றது. சன்னாநல்லூரிலிருந்தும் நாகையிலிருந்தும் பேருந்துகளில்
திருப்புகலூர் செல்லலாம். இது காவிரிக்குத் தென் கரைத்தலம்.

     இறைவரின் திருப்பெயர் அக்நீசர். இது அக்கினி பூசித்த காரணத்தால்
ஏற்பட்ட பெயராகும். இதுவன்றிப் புகலூர் நாதர், சரண்ய புரீசர், புன்னாக
நாதர், கோணப்பிரான் என்னும் பெயர்களும் வழங்குகின்றன. இறைவியாரின்
திருப்பெயர் கருந்தாழ்குழலி, இத்திருப்பெயரை, அப்பர் சுவாமிகள்
(தி.4 பதி.26 பா.3)

பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக்
கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்து
திருந்தா மனமுடை யார்திறத் தென்றும்
பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.

என எடுத்தாண்டுள்ளனர்.

தலவிருட்சம் புன்னை.

     தீர்த்தம்: அக்கிநிதீர்த்தம்; பாணதீர்த்தம் என்பன. அக்கிநிதீர்த்தம்
கோயிலைச்சுற்றிலும் அகழிபோல் சூழ்ந்திருக்கின்றது.

     இது முருகநாயனார் அவதாரஞ்செய்த திருப்பதி. முருகநாயனார்
திருமடத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த பொழுது, அப்பர்
திருவாரூரை வழிபட்டுப் புகலூர்க்கு எழுந்தருளி ஞானசம்பந்தரைக் கண்டு
அளவளாவியிருந்ததோடு, திருவாரூர்ச் சிறப்பை “முத்து விதானம்” என்று
தொடங்கும் பதிகத்தால் ஓதி