பக்கம் எண் :

227

கட்டியுள்ளான், தெற்குத் திருவாயிலுக்கு இராஜராஜன் வாயில் என்று
பெயர். நீராழி மண்டபத்தைச் செய்தவன் ஆர்க்காடு கிழான் சேதிராயன்.
நூற்றுக்கால் மண்டபம் கட்டியவன் நவலோகவீரன். கி. பி. 1659 ல்
வேளாக்குறிச்சி அருணாசலத் தம்பிரானால் இக் கோயிலின் திருமதில்
திருப்பணி நடத்தப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலேயே
இக்கோயிலின் அகழி தோண்டப்பட்டிருக்கிறது. முருகநாயனார் திருமடம்
ஒன்றும் இங்கு இருந்தது. இங்கே அருகில் ஓடும் ஆறு, முடிகொண்ட
சோழப் பேராறு என வழங்கப்பட்டது. சேரமான் சோழன் குகை ஒன்றும்
இங்கு இருந்தது. திருப்புகலூர் அந்தாதி பாடிய நெற்குன்ற வாணருக்கு
நிலம் விடப்பட்டது. இது திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீன
அருளாட்சிக்குட்பட்டது.

     இக்கோயிலில் சோழ மன்னர்களில் சாலை கலமறுத்த
கோவிராசகேசரி வர்மனாகிய முதலாம் இராஜராஜசோழன்,
பரகேசரிவர்மனாகிய இராஜேந்திரசோழன், இராஜகேசரி வர்மராகிய
உடையார் இராஜாதிராஜதேவர், இராஜகேசரிவர்மராகிய இராஜேந்திர
தேவர், இராஜகேசரிவர்மராகிய முதல் குலோத்துங்க சோழதேவர், விக்கிரம
சோழதேவர், திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர் இவர்களின்
காலங்களிலும், பாண்டியர்களில் மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி
கோனேரின்மை கொண்டான், சடாவர்மன், திருபுவனச் சக்கரவர்த்தி
சுந்தரபாண்டியன் இவர்களின் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள்
இருக்கின்றன.

     இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் புகலூர் மகாதேவர்
என்னும் பெயரால் கூறப்பெற்றுள்ளனர். இத்திருக்கோவிலில் இடபவாகன
தேவரையும், இராஜராஜவிடங்கரையும் எழுந்தருளுவித்தவர் இராஜராஜ
மங்கலத்தரையர் ஆவர். அவர்கள் எழுந்தருளுவிக்கப் பெற்ற காலம்:
திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் ஐந்தாம் ஆண்டில் ஆகும்.
இக்கோவிலில் சூரியதேவரையும் அவர் தம் இருபிராட்டியாரையும்
எழுந்தருளுவித்தவர், தேவன் பட்டகன் பண்டாரமும், அவரது மகளாரும்
ஆவர். இவை நிகழ்ந்தகாலம் “இரட்ட பாடி ஏழரை இலக்கமும் கொண்டு”
எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி யுடைய பரகேசரி இராஜேந்திர தேவரின்
11 ஆம் ஆண்டாகும். இங்கே சிவபுரத்துத் தேவரை எழுந்தருளுவிக்கப்பெற்ற காலம், முதலாம் இராஜாதிராஜரின் 32ஆம் ஆண்டாகும்.

     பாண்டி குலாசனி வளநாட்டு, ஆர்க்காட்டுக் கூற்றத்து இறையூரான்,
முதற் குலோத்துங்க சோழதேவரின் 36 ஆம் ஆண்டில் அமாவாசைதோறும்
புகலூர்த்தேவர் எழுந்தருளுவதற்குப் பொன்