|
66.
திருப்புகலூர்வர்த்தமானேச்சுரம்
இறைவன் பெயர் வர்த்தமானேச்சுரர்.
இறைவியார் பெயர்
கருந்தாழ்குழலியம்மை.
திருப்புகலூர்
ஆலயத்திற்குள் வடபக்கத்தில் திருப்புகலூர்
வர்த்தமானேச்சரம் உள்ளது. இது ஆண்டவன் பெயரைக் குறிக்கின்றது.
இங்கே அக்கினீசுவரர் உருவமும், அதற்கடுத்து வடபக்கத்தில்
வர்த்தமானேசுவரர் சந்நிதியும் முருக நாயனார் திருவுருவமும்
அமைந்துள்ளன.
67.
திருப்புள்ளிருக்குவேளூர்
சம்பாதி,
சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், வேதங்களும்,
முருகக்கடவுளும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர்
பெற்றது. இது வைத்தீசுவரன் கோயில் என்று வழங்கப் பெறுகின்றது.
இது மயிலாடுதுறை
- சிதம்பரம் தொடர,் வண்டிப் பாதையில்
வைத்தீசுவரன் கோயில் தொடர் வண்டி நிலையத்திற்குக் கிழக்கே
1 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. மயிலாடுதுறையிலிருந்து சீகாழி
செல்லும் பேருந்துகளில் வைத்தீசுவரன் கோயில் என வழங்கும்
இத்தலத்தை அடையலாம். இது காவிரியின் வடகரைத்தலங்களுள் ஒன்று.
இறைவரின்
திருப்பெயர் வைத்தியநாதர். இறைவியாரின் திருப்பெயர்
தையல்நாயகி. முருகன்-செல்வமுத்துக் குமாரர்.
தீர்த்தம்
சித்தாமிர்தத் தீர்த்தம். இது திருக்கோயிலின் உள்ளே
இருக்கின்றது. இது மிகப்பெருமைவாய்ந்தது. இதில் நீராடியவர்நோய்
நீங்கப்பெறுவர்.
சூரியன்,
செவ்வாய், இராமலக்குமணர், அநுமார் முதலானோர்
வழிபட்டுப் பேறு எய்தினர். இங்கு எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுள்
முத்துக்குமாரசுவாமி என்னும் திருப்பெயருடன் விளங்கி, அன்பர்களுக்கு
வேண்டும் வரங்களை அளித்து வருகிறார். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர்
பதிகம் ஒன்று. நாவுக்கரசர் பதிகம் இரண்டு ஆக மூன்றுபதிகங்கள்
இருக்கின்றன.
|