பக்கம் எண் :

231

அவர்கள் ஒவ்வொரு வாரத்தில் செவ்வாய்க் கிழமையிலும்,
ஒவ்வொருமாதத்தில் கிருத்திகை நாளிலும் வைத்தீசுவரன் கோயிலுக்கு
எழுந்தருளி வழிபாடு செய்தருளுகின்றார்கள். இக்காலங்களிலன்றி,
நிர்வாகத்துறையில் திடீரென்று எழுந்தருளி நித்திய நைமித்திகங்கள் உரிய
காலங்களில் நன்கு நடைபெறுகின்றனவா எனவும் கவனித்தருளுகின்றார்கள்.

கல்வெட்டு:

     சகம் 1814 (கி. பி. 1892) நகரத்தாரால் திருப்பணியும் குடமுழுக்கும்
செய்யப்பட்டன. சகம் 1689 (கி. பி. 1767) ராஜாமகாராசர் காலத்தில்
முத்துக்குமாரசாமித் தம்பிரானால் திருப்பணிசெய்யப் பட்டது. சகம் 1682 (கி.
பி. 1770) துளஜாமகாராசர் காலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது.
சகம் 1802 (கி. பி. 1880) கொடிக்கம்பம் தங்கமயம் ஆக்கப்பட்டது.

                  68. திருப்புறம்பயம்

     பக்கத்தே தண்ணீரையுடையது என்று பொருள்படும். இதற்கு
ஏற்ப திருக்கோயிலின் மேல்புறத்தில் மதிலை ஒட்டி நீர்நிலை இன்றும்
இருக்கின்றது. ஒரு காலத்தில் பிரளயம் வந்தபொழுது அது ஊரினுள்
புகாதவாறு தடைப்பட்டு புறத்தே நின்றமையால் இப்பெயர்பெற்றது என்பர்.
அதற்கு ஏற்ப இவ்வூர்த் தல விநாயகர்க்குப் பிரளயங்காத்த விநாயகர்
என்ற பெயர் இருக்கின்றது.

     கும்பகோணத்திற்கு வடமேற்கே 9 கி. மீ. தூரத்தில் மண்ணியாற்றின்
வடகரையில் இருக்கின்றது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

     இறைவரது திருப்பெயர் புறம்பயநாதர்; சாட்சிநாதர். ஒரு
வணிகப்பெண்ணின் நிமித்தம் இவ்வூர்ச் சிவபெருமான் மதுரை சென்று
சாட்சி கூறினமையால் சாட்சிநாதர் எனப் பெயர் பெற்றார். இறைவியாரது
திருப்பெயர் கரும்படுசொல்லி. இத்திருப்பெயரை, (தி. 2 பதி. 196. பா. 5)
ஞானசம்பந்தப் பெருந்தகையார். “ஓர் பாகம் கரும்பொடு படு சொலின்
மடந்தையை மகிழ்ந்தோய்” என்று எடுத்தாண்டுள்ளது பெருமகிழ்ச்சியைத்
தருவதாகும். கரும்படு சொல்லி என்பதற்குக் கரும்பை வென்ற சொல்லை
உடையவள் என்பது பொருள்.