பக்கம் எண் :

232

     தீர்த்தம், பிரம தீர்த்தம். இது இராஜகோபுரத்திற்கு வட கிழக்கில்
இருக்கின்றது.

     சத்தசாகர தீர்த்தம்: இது பிரமதீர்த்தத்திற்குக் கிழக்கில் நந்தவனத்தில்
இருக்கிறது. பிரளயகாலத்தில் அழிக்கவந்த ஏழுகடல்களும் இதனுள்
அடங்கி, இருக்கின்றன என்று புராணம் கூறுகின்றது.

     மண்ணியாறு: இது ஊரின் கிழக்கே இருக்கிறது.

     கொள்ளிடப்பேராறு: இரு ஊருக்கு வடபால் 2 கி. மீ. தூரத்தில்
இருக்கிறது.

     தலவிருட்சம் புன்னை. இது முதல் பிராகாரத்தில் வட மேற்கில்
இருக்கின்றது.

     சனகர் முதலிய நால்வர்களுக்குச் சிவபெருமான் இத்தலத்தில்
அறத்தை உணர்த்தினார். இச்செய்தியை, இவ்வூர்ப்பதிகத்திலுள்ள,
“நால்வர்க் கறம்பயனுரைத்தனை புறம்பயமமர்ந்தோய்” (திருப்பாட்டு 1)
என்னும் ஞானசம்பந்தர் தேவாரப் பகுதியால் அறியலாம். இத்தலத்தில், தன்
தங்கை மகளுடன் வந்தடைந்த காவிரிப் பூம்பட்டினத்து வணிகன் அரவு
கடித்து இறந்துபோக, சிவபெருமான் அவனுக்கு உயிர் அளித்ததோடு
அவனுக்கு அப்பெண்ணைத் திருமணம் புரிவித்தார். அப்பெண் மதுரையில்,
அவளது கணவனின் முதல் மனைவியால் பழிக்கப்பெற்றபோது வன்னி,
கிணறு, மடைப் பள்ளி இவைகளோடு சென்று சாட்சி பகர்ந்தார்.
திருக்கோயிலுக்கு நாளும் விறகு கொண்டு வந்த ஒரு ஆதித்திராவிடற்கு
வீடு பேற்றை அருளினார். துரோணர் இறைவரை வழிபட்டு அசுவத்தாமா
என்ற புதல்வனைப் பெற்றார். விசுவாமித்திரர். சுக்ரீவன் வழிபட்டும் பேறு
பெற்றார்கள்.

     இத்தலத்திற்குத் தமிழில் ஒரு புராணம் இருக்கின்றது. அது
இதுவரை அச்சிடப்பெறவில்லை. அதை ஆக்கியோரும் இன்னாரென்று
புலப்படவில்லை. இத்தலத்திற்கு உலா ஒன்று இருந்தது. அதில் சில
கண்ணிகள்தான் கிடைத்துள்ளன. இத்தலத்திற்குப் புறம்பயமாலை என்ற
நூலும் உண்டு. அதில் பத்துப் பாடல்களே கிடைத்துள்ளன. எஞ்சியவைகள்
கிடைத்தில. அவைகளைத் திருவையாறு, வித்துவான், திரு. வை. சுந்தரேச
வாண்டையார் அவர்கள் அச்சிட்டு உள்ளார்.

     இத்தல விநாயகர்க்குப் பிரளயங்காத்த விநாயகர் என்று பெயர்.
இவருடைய திருமேனி கடல்படு பொருள்களாகிய இப்பி,