பக்கம் எண் :

237

வழங்கப்பட்டது. அரசன் நலத்தின் பொருட்டுக் கோதண்டராமன் சந்தி
என்ற விழா நடத்துவதற்காக நிலதானம் செய்யப்பட்டது.

     பரகேசரி ஆதி ராஜேந்திர தேவன் மூன்றாம் ஆண்டில், நில தானம்
செய்யப்பட்டது.

                  70 திருப்பெரும்புலியூர்

     புலிக்கால் முனிவரால் பூசிக்கப்பெற்றமையால் இப்பெயர் பெற்றது.
சிதம்பரம் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர் பெறும். அதனின்று இது
வேறு ஆகும்.

     திருவையாற்றிற்கு வடமேற்கே சுமார் 3 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது.
இது காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்றாகும்.

     இறைவரது திருப்பெயர் வியாக்ரபுரீசுவரர். இறைவியாரது திருப்பெயர்
சௌந்தரியநாயகி.

     இதற்கு ஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஒன்று இருக்கிறது.

                  71. திருமங்கலக்குடி

     இது மயிலாடுதுறை கும்பகோணம் தொடர்வண்டிப்பாதையில்,
ஆடுதுறை தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே சுமார்4.5 கி. மீ.
தூரத்தில் உள்ளது. ஆடுதுறையிலிருந்து - திருப்பனந்தாள் செல்லும்
பேருந்துகளில் இவ்வூரை அடையலாம். காவிரி வடகரைத் தலங்களுள்
ஒன்று.

     இறைவரது திருப்பெயர் புராணேசுவரர். இத்திருப்பெயர், இவ்வூர்ப்
பதிகம் முதல் திருப்பாட்டில்,

“நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப்
 பூரித்தாட்டி யர்ச்சிக்க விருந்த புராணனே”

என ஞானசம்பந்தரால் எடுத்தாளப்பட்டுள்ளது. இதிலுள்ள வரலாறு
குறிப்புரையில் உணர்த்தப்பட்டது. இறைவியாரது திருப்பெயர் மங்களநாயகி.