|
23ஆம் ஆட்சியாண்டில்
பஞ்சம் ஏற்பட்டதையும், கோனேரின்மை
கொண்டானின் கல்வெட்டு முதற் குலோத்துங்க சோழனின் 16 ஆம்
ஆட்சியாண்டில் வருவாய்க் கணிப்புக்காக நிலங்கள் அளக்கப்
பெற்றதையும் கோப்பெருஞ் சிங்கதேவர் கல்வெட்டு, இத்திருக்கோயில்
முதற்பிராகாரத்தில் நாயகர் திருமண்டபத்தில் புராணலிங்க தேவரை
எழுந்தருளுவித்து நிவந்தம் அளித்தவன், பாண்டி குலாசனி வளநாட்டு
ஆர்க்காட்டுக் கூற்றத்துப் பெருமங்கலத்து உதயஞ் சடையனான
தொண்டைமான் என்பதையும் குறிப்பிடுகின்றன. தட்சிணா மூர்த்தி,
கோயிலில் நின்ற கோலத்தில் கைகுவித்துக் கடவுளை வணங்கும் முறையில்
இருக்கும் உருவம் முல்லைக்குடையான் தியாகப் பெருமாளாகிய வானவன்
பல்லவரையன் உருவமே. இரண்டாம் கோபுரத்தில் இருக்கும் உருவம்
வரகுணப் பெருமாள் உருவம் ஆகும். இவ்வூர் விருதராச பயங்கர
வளநாட்டு வேம்பற்றூராகிய எதிரிலி சோழசதுர்வேதிமங்கலத்து மங்கலக்குடி
எனக் குறிக்கப் பெற்றுள்ளது.
72.
திருமணஞ்சேரி
மயிலாடுதுறை
கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், குத்தாலம்
தொடர் வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 5.5 கி. மீ. தூரத்தில்
இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து இத்தலத்துக்கு நகரப் பேருந்துகள்
உள்ளன. இது காவிரியின் வடகரைத்தலங்களுள் ஒன்று.
இறைவர்
திருப்பெயர் அருள்வள்ளல்நாதர். இறைவியார் திருப்பெயர்
யாழினும் மென்மொழியம்மை.
மன்மதன்
பூசித்துப் பேறுபெற்றான். ஆமை பூசித்து மனித
உருப்பெற்றது. இதற்கு ஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஒன்று. அப்பர்
அருளிய பதிகம் ஒன்று ஆக இரு பதிகங்கள் இருக்கின்றன.
கல்வெட்டு:
இவ்வூரில்
28 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டிருக்கின்றன.
அனைத்தும் சோழர்களுடைய கல்வெட்டுக்களே. (கி. பி. 11-12ஆம்
நூற்றாண்டு) நாடு - விருதராசபயங்கரநாடு, குறுக்கை நாடு, ஊர்
திருமணஞ்சேரி, சுவாமிபெயர் திருக்கற்றளிமாதேவர் பரமசுவாமி என்பன.
மற்ற ஊர்கள் கங்கைகொண்ட சோழ சதுர்வேதி மங்கலம், விடேல்
விடுகுதேவிமங்கலம், கரிகாலசோழ சதுர்வேதி மங்கலம்,
|