பக்கம் எண் :

241

திருப்பெயர் கற்பகவல்லியம்மை.

     தலவிருட்சம் புன்னைமரம். வடக்குப் பிராகாரத்தில் இருக்கிறது.

     இது வாயிலார் நாயனார் அவதாரஞ்செய்த திருப்பதி. சிவநேசச்
செட்டியாருடைய மகளாகிய பூம்பாவை அரவு கடித்து இறந்தபோது, அவர்
தந்தையார், அம்மையாரது உடலை எரித்து எலும்பையும் சாம்பலையும் புது
மட்பாண்டத்தில் வைத்திருந்தார். அங்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர்
“மட்டிட்ட புன்னையங்கானல்” என்று தொடங்கும் பதிகம் பாடி, அவரது
எலும்பைப் பெண்ணுருவாக்கியருளினார். இராமபிரான் வழிபட்டு, ஐப்பசி
ஓணநாளில் பிரமோற்சவம் நடத்துவித்தார்.

     பங்குனி மாதத்தில் அறுபான்மும்மை நாயன்மார்களுடைய திருவிழா,
சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. ஊரின் பெயர் மயிலாப்பூர். அங்குள்ள
கோயிலுக்கே கபாலீச்சரம் என்று பெயர். மயிலாப்பூர், மயிலாப்பு என்று
வழங்கப்பெற்றிருப்பது, அப்பர் சுவாமிகளது திருஒற்றியூர்த் திருத்தாண்டகம்
ஆறாம் திருப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. அப்பகுதி,

“வடிவுடைய மங்கையுந் தாமுமெல்லாம்
 வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப்புள்ளே”

என்பதாகும். இதையே,

“மங்குல் மதிதவழும் மாடவீதி
 மயிலாப்பி லுள்ளார் மருகலுள்ளார்”

எனக் கோயில்புக்க திருத்தாண்டகத்திலும் காணலாம்.

                      74. திருமருகல்

     இது மருகல் என்னும் ஒருவகை வாழையைத் தலமரமாகக்
கொண்டுள்ளமையால் இப்பெயர் பெற்றது.

     மயிலாடுதுறை - பேரளம் தொடர்வண்டிப் பாதையில், நன்னிலம்
தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 10.5. கி. மீ.