பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)92. திருநெல்வேலி1111

92. திருநெல்வேலி

பதிக வரலாறு:

     பற்றார் புரஞ்செற்றாராகிய புற்றாரரவணிவாரைக் கற்றார் தொழுதேத்துங்
கானப்பேர், சுழியல், குற்றாலம், குறும்பலா ஆகிய நாற்றானங்களைக்
கும்பிட்டு, திருநெல்வேலியைக் குறுகிப்பாடியருளியது
இத் திருப்பதிகம்.

பண்: சாதாரி

ப.தொ.எண்: 350 பதிக எண்: 92

 திருச்சிற்றம்பலம்

3788. மருந்தவை மந்திர மறுமைநன்
       னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே
     சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன்
     சொரிதரத் துன்றுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி
     யுறை செல்வர்தாமே.                  1


     1. பொ-ரை: நல்ல நெஞ்சமே! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை
செய்வாயாக. அத்திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும்.
மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும். மறுமையில் நற்கதி தரும்.
மற்றும் உயிர்கள் அடைதற்கேற்ற பயன்கள் யாவும் தரும். போக்கமுடியாத
துன்பத்தைப் போக்கும். அத்திரு நாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க
சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்க,
நெருங்கியுள்ள, பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற
மலர்களைப் பூக்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருள்கிற அருட்செல்வர்
ஆவார்.

     கு-ரை: முல்லை நிலத்தில்கொன்றை மரங்கள் பூத்தமலர்களை யுதிர்க்க
அருகிலேயுள்ள செருந்தி மரங்கள் பொன் போன்று மலர்கள் விரிக்கும்
திருநெல்வேலி என்றது, “செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும்”
மாந்தருறைவது எனக்குறித்தவாறு. திருநெல்வேலி