பக்கம் எண் :

1130திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3811. வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
       ஆதிய வருமறை யீரே
ஆதிய வருமறை யீருமை யலர்கொடு
     ஓதிய ருணர்வுடை யோரே.             2

3812. விளங்குதண் பொழிலணி வெங்குருமேவிய
       இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீரும திணையடி
     உளங்கொள வுறுபிணி யிலரே.          3


     2. பொ-ரை: நால்வேதங்களையும் ஐயந்திரிபறக் கற்ற அந்தணர்கள்
வழிபடுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி
வீற்றிருந்தருளும், முதன்மையான வேதத்தின் பொருளானவரே!
முதன்மையான வேதத்தின் பொருளானவரான உம்மை மலர்கள் கொண்டு
பூசித்துத், தோத்திரம் செய்பவர்கள் சிவஞானம் உடையவர்கள் ஆவர்.

     கு-ரை: ஆதிய அருமறையீர் - முதன்மையான வேதத்தின்
பொருளாய் உள்ளீர், வேதம் பிரபல சுருதி எனப்படுதலின் முதன்மையானது
என்னப் பட்டது. இனி ஆதியென்பதற்குப் பழமையான எனலும் ஆம். அலர்
கொடு - மலர்கள் கொண்டு (பூசித்து) ஓதியர் - தோத்திரம் செய்பவர்கள்,
உணர்வு உடையோர் - சிவஞானம் உடையவராவார். இனி ஓதி என்பதற்கு
அறிவு எனவும் பொருள் உண்மையால் பூசித்து உணர்பவர் தாம்
உணர்வுடையோர், அல்லாதார் உணர்விலிகளே எனலுமாம். அது
“உடையரெனப்படுவது ஊக்கம் அஃதிலார் உடையது உடைய ரோமற்று”
(குறள்.591) என்புழிப் போல.

     3. பொ-ரை: பெருமையுடன் விளங்குகின்ற குளிர்ந்த
சோலைகளையுடைய அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும், இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையினையுடைய
சிவபெருமானே! இளம்பிறைச் சந்திரனைச் சடையில் அணிந்துள்ள
உம்முடைய இரண்டு திருவடிகளையும் மனத்தால் நினைத்துத்
தியானிப்பவர்கள் உற்றபிணிகள் இல்லாதவராவர்.

     கு-ரை: விளங்கு - மூவுலகிலும் விளங்கும் பெருமைவாய்ந்த, வெங்குரு
என்க. விளங்கும் பொழில் எனக்கொள்ளின், செழிப்புடைய சோலை என்க.
என்றும் ஓர் பெற்றியாய்க் கலைவளரப் பெறாமையால்,