பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)96. திருநெல்வெண்ணெய்1143

3834. நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
  ஊர்மல்கி யுறையவல் லீரே
ஊர்மல்கி யுறையவல் லீருமை யுள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே.                  4

3835. நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
  ஆடிளம் பாப்பசைத் தீர
ஆடிளம் பாப்பசைத் தீருமை யன்பொடு
பாடுள முடையவர் பண்பே.                  5


     4. பொ-ரை: நீர்வளம்மிக்க தொன்மையான புகழ் பொருந்திய
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தை விரும்பி அவ்வூரில் நிலையாக
வீற்றிருந்தருளும் சிவபெருமானே! அவ்வாறு அவ்வூரில் நிலையாக
வீற்றிருந்தருளுகின்ற உம்மை எப்போதும் இடையறாது தியானித்தலே
உலகின் உயர்ந்த புகழையுடைய சிவஞானிகள் இயல்பாகும்.

     கு-ரை: நீர்மல்கு - நீர்வளம்பொருந்திய, நெல்வெண்ணெய் மேவிய
ஊர் - நெல்வெண்ணெயென்னும் பெயர் பொருந்திய ஊரில். மல்கி -
நிலைபெற்று, உறையவல்லீர் - வாழ்தலையுடையீர், உம்மை எப்பொழுதும்
ஒழியாது நினைத்திருத்தல் உலகில் உயர்ந்த புகழையுடைய சிவஞானிகள்
இயல்பாம். “இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற்
றுலகு” (குறள் - 23) என்புழியும் இவ்வாறு வருதல் காண்க.

     5. பொ-ரை: நீண்ட இளமரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த
அழகிய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற,
ஆடுகின்ற இளம்பாம்பினைக் கச்சாகக் கட்டியுள்ள சிவபெருமானே!
அவ்வாறு ஆடுகின்ற இளம்பாம்பைக் கச்சாக அணிந்த உம்மை அன்போடு
பாடுகின்ற உள்ளம் உடையவர்களின் பண்பே சிறந்ததாகும்.

     கு-ரை: நீடு - நெடிய, இளம்பொழில் - இளமரச்சோலை,
பாப்பசைத்தீர் - (பாம்பு) அசைத்தீர், கச்சையாகக் கட்டியருளினீர், உம்மைப்
பாடும் விருப்பமுடையவர் பண்பே, சிறந்த பண்பாவது, உளம் - இங்கே
விருப்பம். இரண்டாம் அடி “ஆடிளம்பாம்பசைத் தானும்” (தி.4.ப.4.பா.1.)
என அப்பர் வாக்கிலும், வருவது