பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)99. திருமுதுகுன்றம்1163

3870. மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
  கட்டமண் டேரைக்காய்ந் தீரே
கட்டமண் டேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே.                  10

3871. மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை
  நாடிய ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி யிலரே.                    11

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: மொட்டுக்கள் மலர்கின்ற சோலைகளையுடைய அழகிய
திருமுதுகுன்றத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, கட்டுப்பாட்டினையுடைய
சமணர்களையும், புத்தர்களையும் கோபித்தவரான சிவபெருமானே!
சமணர்களையும், புத்தர்களையும் கோபித்த உம்மைத் தியானிப்பவர்கள்
சிறந்த அடியார்கள் பெறுதற்குரிய முத்திப்பேற்றினைப் பெறுவர்.

     கு-ரை: கட்டு அமண் - கட்டுப்பாட்டையுடைய அமணரோடு. தேர் -
தேரரை. கடைக்குறை. காய்ந்தீர் - கோபித்தருளிளீர். உம்மைக் கருதுவோரே
அன்பர்கள் பெறும் சிறப்பைப் பெறுதற்குரியராவர். “செம்பொற் பாத
மலர்காணாப் பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன்”
என்பதன் எதிர்மறை.

     11. பொ-ரை: அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமுதுகுன்றம் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானைத் திருஞான
சம்பந்தர் போற்றி அருளினார். அவ்வாறு திருஞானசம்பந்தர் போற்றியருளிய
இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுபவர்கள் பழியிலர் ஆவர்.

     கு-ரை: மூடிய சோலைசூழ் - மூடுவதுபோல் அடர்ந்தசோலை. பாடிய
அவர் பழியிலர் ஆவர் என்க.