பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)113. திருக்கழுமலம்1273

வரு - என்பதில் பிற வினை விகுதி தொக்கு நின்றது. வசையொடும்
அலர்கெட - சைவர்களுக்குவந்த பழியும், பழிதூற்றலும் கெடுமாறு. அருகு
அரன் சமணர்களை அழித்தவன். அருகு - அருகர். அரன் - ஹரன்;
அழித்தவன். கருதலில் - நினைக்கவும் முடியாதபடி. இசை - சைவர்
அடைந்த புகழ். முரல்தரும் - உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த.
மருள் - வியப்பு. கழுமலம் அமர் இறைதரும் அருளே - கழுமலத்தில்
எழுந்தருளியுள்ள சிவபெருமான் செய்த திருவருட்பெயருக்கே யாகும்.
மருவிய - அவ்வருளைப் பெற்ற. தமிழ் விரகன - முத்தமிழ் விரகரது.
மொழி - இப்பாடல்களை. வல்லவர் - வல்லவர்களது. இடர் திடம் ஒழி -
இடர் ஒழிதல் நிச்சயம். ஒழி - முதனிலைத் தொழிற் பெயர்.

திருஞானசம்பந்தர் புராணம்

போத நீடுமா மறையவர் எதிர்கொளப்
     புகலிகா வலருந்தம்
சீத முத்தணிச் சிவிகைநின் றிழிந்தெதிர்
     செல்பவர் திருத்தோணி
நாதர் கோயில்முன் தோன்றிட நகைமலர்க்
     கரங்குவித் திறைஞ்சிப்போய்
ஓத நீரின்மேல் ஓங்கு கோயிலின்
     மணிக்கோபுரஞ் சென்றுற்றார்.

அங்கம் மாநிலத் தெட்டுற வணங்கிப்புக்
     கஞ்சலி முடிஏறப்
பொங்கு காதலிற் புடைவலங் கொண்டுமுன்
     பணிந்துபோற் றெடுத்தோதித்
துங்க நீள்பெருந் தோணியாங் கோயிலை
     அருளினால் தொழுதேறி
மங்கை யோடுடன் வீற்றிருந் தருளினார்
     மலர்க்கழல் பணிவுற்றார்.

                            - சேக்கிழார்.