பக்கம் எண் :

ஆராய்ச்சிக் கட்டுரைகள்153

நினைத்ததையும் கூறினார். மன்னனும் பூசலாரும் இறையருளில் மூழ்கிப்
பேரின்பம் அடைந்தனர்.

     காஞ்சிபுரத்தில் முதன் முதல் கச்சிக் கற்றளி எடுப்பித்தவன்
இராஜசிம்மனே. அவனுக்கு அசரீரியாக இறைவன் உணர்த்தியதாகக்
கல்வெட்டும் கூறுகிறது. இவை பூசலார் நாயனார் புராணத்துடன் ஒத்து
இருப்பதும் கணிக்கத்தக்கது 1 தொகுத்து நோக்கினால், சுந்தரரும் காஞ்சி
கைலாசநாதர் கோயில் கட்டிய இராஜசிம்ம பல்லவனாகிய கழற்சிங்கனும்,
பூசலார் நாயனாரும் சமகாலத்தவர் என்பதை எளிதில் உணரலாம். எனவே
சுந்தரர் காலத்தை கி.பி. 700 முதல் 728 வரை எனக் கொள்ளலாம்.

மாணிக்கவாசகர் காலம்:

     நெடுஞ்சடையன் பராந்தகனாகிய முதல்வரகுணன் 786 இல்
முடிசூடினான். இவனது கல்வெட்டுக்கள் 43 ஆம் ஆட்சி ஆண்டுவரை
கிடைக்கின்றன 2 எனவே இவனது ஆட்சி 11இல் முடிவடைந்தது.
அவ்வாண்டிலிருந்து வரகுணனின் மகனான ஸ்ரீவல்லபனின் ஆட்சி
துவங்குகிறது எனலாம். வல்லபன் தனது 18 ஆம் ஆட்சி ஆண்டில் (829)
சிங்களத்தை வென்றான். 3 செப்பேடுகளும் ஸ்ரீவல்லபனின் சிங்கள
வெற்றியைக் குறிப்பிடுகின்றன.

     ஸ்ரீவல்லபனிடம் தோற்ற சிங்களவர் வாளா இருக்கவில்லை.
பாண்டிநாட்டின் மீது படையெடுக்க, தக்க சமயத்தை எதிர் பார்த்துக்
காத்திருந்தனர். இதனைச் சிங்களவர் ஸ்ரீவல்லபனின் கடைசி காலத்தில்
வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். இச்சரித்திர நிகழ்ச்சிகளை இலங்கைச்
சரிதமாகிய மகாவம்சம் விரிவாய் எடுத்துரைக்கிறது.


     1 S.I.I. XII Introduction page III - 'This is evidently an allusion
to Periyapuranam wherein it is stated that the Pallava king was
directed to postpone the consecration of this temple so that the
Lord might be present elsewhere at a similar ceremony conducted
in the mental plane by Saint Pusalar'

     2 S.I.I XIV No. 41 - Eruvadi Naguneri Taluk.

     3 S.I.I XIV No. 44 - Erukkangudi Sattur Taluk.