|
மகாவம்சத்தில் கூறப்படும்
செய்தி வருமாறு: இலங்கையில் இரண்டாம்
சேனன் கி.பி. 851இல் முடிசூடினான். இவன் காலத்தில் பாண்டி மன்னனின்
மகன் ஒருவன் தன் தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்தான். இலங்கை
மன்னன் சேனாவின் உதவியை நாடினான். தக்க தருணம் இதுதான் என்று
உணர்ந்து இலங்கை மன்னனும் தனது 9ஆம் ஆட்சி ஆண்டில் பாண்டி
நாட்டின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடினான். மதுரை மன்னன்
போர்க்களத்தில் இறந்தான். மன்னனின் மகனைச் சிங்களவர் மதுரை
சிம்மாதனத்தில் ஏற்றினர். சிங்கள மன்னன் மதுரா துனு என்ற பட்டம்
கொண்டான்.
இந்நிகழ்ச்சியின்
காலம் கி.பி. 860 என்று மகாவம்சத்தால் அறியலாம்.1
இப்போரில் இறந்தவன் ஸ்ரீ வல்லபனே. இவன் போரில் இறந்தவன் என்னும்
செய்தியினைப் பாண்டியர் செப்பேடுகளும் உறுதி செய்கின்றன.
கி.பி.
860இல் மதுரை சிங்காதனத்தை அலங்கரித்தவன் ஸ்ரீ மாற ஸ்ரீ
வல்லவனின் மகனே ஆவான். இவன் தந்தையோடு முரண்பட்டவன்.
சிங்களவரின் துணைக்கொண்டு அரசைக் கைப்பற்றியவன். தன் தந்தை
போர்க்களத்தில் சிங்களவர்களால் கொல்லப்படுவதற்கும் காரணமானவன்.
இம்மகன் யார் என்பதை பின்னால் பார்ப்போம்.
பாண்டியர்
செப்பேடுகளின்படி ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனுக்கு இரண்டு
மகன்கள் இருந்தனர். மூத்தவன் சடையவர்மனாகிய வரகுணன் மகாராஜன்.
இவனை இரண்டாம் வரகுணன் என்று சரித்திர ஆய்வாளர் அழைப்பர்.
இவனது தம்பியின் பெயர் சடையவர்மன் பராந்தகன் வீரநாராயணன்
என்பதாகும். அண்ணனும் தம்பியும் தங்கள் பாட்டனார் முதலாம்
வரகுணனான நெடுஞ்சடையன் பராந்தகனின் பெயரைத் தரித்துள்ளனர்
என்பது ஈண்டு நோக்கத்தக்கது.
இரண்டாம்
வரகுணனின் நான்கு கல்வெட்டுகள் வானிலைக்
குறிப்புக்களைக் கொடுக்கின்றன. அவைகளின் காலத்தைக் கீழே காணும்
பட்டியலில் காணலாம்.
1
South Indian Temple Inscription Volume III Part I Pages 37
and 102.
|