பக்கம் எண் :

174தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

2. திருஅம்பர்மாகாளம்

     அம்பன், அம்பாசுரன் என்ற இரண்டு அரக்கர்களைக் கொன்ற பாவம்
நீங்கக் காளி பூசித்த பதியாதலின் இப்பெயர் பெற்றது. இது கோயில்
மாகாளம் எனவும் வழங்கப்பெறும். பேரளம்-திருவாரூர் தொடர்வண்டித்
தொடரில் பூந்தோட்டம் நிலையத்திலிருந்து கிழக்கே 4.கி.மீ தூரத்தில்
உள்ளது. இது காவிரியின் தென்கரைத் தலங்களுள் ஐம்பத்தைந்தாவது தலம்
ஆகும். கோயில் ஊர் நடுவில் இருக்கின்றது. இவ்வூரில் நல்ல
ஸ்தபதிகளுள்ளனர். சோழர் திருப்பணி. ஆனால் பூர்த்தியாகவில்லை.

     இறைவரின் திருப்பெயர் காளகண்டேசுவரர். இறைவியின் திருப்பெயர்
பட்சநாயகி. கிழக்கு நோக்கிய சந்நிதி. அம்மன், சுவாமிக்கு வலப்புறம்
விளங்குகிறார். தியாகராசர் சந்நிதிக்கு எதிப்புறம் சுந்தரரும் பரவையாரும்
உள்ளனர். தீர்த்தம் மாகாளதீர்த்தம்.

     காளியால் பூசிக்கப்பெற்றது. இச்செய்தியை, “காளி ஏத்தும் அழகனார்
அரிவையோடிருப்பிடம் அம்பர் மாகாளந்தானே” என்னும் இத்தலத்துத்
தேவாரப் பகுதியால் அறியலாம். இங்குக் காளிக்குத் தனிக்கோயில் தெற்குத்
திருச்சுற்றாலையில் (பிராகாரத்தில்) இருக்கின்றது. மாகாள இருடியரும்
பூசித்துப் பேறுபெற்றனர். இத்தலத்து இறைவரைப் புதிய மலர், சந்தனம், புகை
இவைகளைக் கொண்டு வழிபடுவோர் தாம் எண்ணிய பொருளைப் பெறுவர்.
இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் மூன்று உள்ளன.

     ஆண்டுதோறும் வைகாசிமாதத்தில் ஆயில்யநாளில் சோமாசி மாற
நாயனார் யாகவிழா மிக்க சிறப்புடன் நடைபெறும். அம்பருக்கும்,
அம்பர்மாகாளத்திற்கும் இடையில் சோமாசிமாற நாயனார் யாகம் செய்த
மண்டபம் இருக்கின்றது. சோமாசிமாற நாயனார் அவருடைய மனைவியார்
இவர்களின் பிரதிமைகள் கோயிலில் இருக்கின்றன. அதிகாரநந்தி மானிட
உருவம். முன்நந்தி இடம் மாறி இருக்கிறது. நந்திக்கு அருகில் நாயனாருக்கு
இறைவனும் இறைவியும் காட்சி தரும்வண்ணம் எழுந்தருளியிருக்கிறார்கள்.
அருகில் நாகநாதர் என்ற பெயரில் மற்றொரு சிவலிங்கம் இருக்கின்றது.

கல்வெட்டு:

     ‘பூமாது புணர புவிமாது வளர’-என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை
உடைய முதற்குலோத்துங்க சோழ தேவரின் மூன்றாம்