பக்கம் எண் :

178தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

     இருபத்திரண்டாவது இராச்சிய ஆண்டுகளில் பொறிக்கப்பெற்றனவாகும்.
ஏனைய இரண்டு கல்வெட்டுக்களில் அரசர்களின் பெயர்கள் காண
முடியாதவாறு சிதைந்து விட்டன. அவற்றுள் ஒன்று ‘தேவற்கு யாண்டு
பத்தாவது’ என்றும், மற்றொன்று உடையார்தம் பரிசு’ என்றும்
தொடங்குகின்றன.

     இக் கல்வெட்டுக்களில்1 இறைவரின் திருப்பெயர் தம்பரிசுடைய
நாயனார் எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. இக்கோயிலில் விநாயகப்
பிள்ளையாரையும், அம்பெறிந்த பெருமாளையும், நாச்சியாரையும்,
ஆட்கொண்ட நாயகதேவரையும், நாச்சியாரையும், உடையார்க்குத்
திருப்பள்ளியறைநாச்சியாரையும், ஆளுடைய பிள்ளையாரையும்
எழுந்தருளுவித்தவன் இவ்வூர் வியாபாரிகளில் சாத்துடையான்
தம்பரிசுடையான் ஆதிச்ச தேவனான அமரகோன் ஆவன்.

     மார்கழி, சித்திரைத் திருநாள்கள் இக்கோயிலில் சிறப்பாகக்
கொண்டாடப்பெற்று வந்தன. இதன் பொருட்டு ஏமலூருடையான்
திருப்பங்குடையான் திருவாண்டானின் தந்தையான கிளியுடையான்
அணுக்கன் நிலமளித்திருந்தான்.

5. திருஆரூர்

     மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் - திருத்துறைப்பூண்டி
தொடர்வண்டிப் பாதையில் உள்ள தொடர்வண்டி நிலையம். மயிலாடுதுறை,
தஞ்சை, காரைக்கால் முதலிய பல நகரங்களிலுமிருந்து பேருந்துகள்
உள்ளன. இது சோழநாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களுள்
எண்பத்தேழாவது ஆகும்.

     இவ்வூர் மிகப் பழமைவாய்ந்தது. இச்செய்தியை “திருவினாள்
சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே”
என்னும் அப்பர் சுவாமிகள் தேவாரப் பகுதியால் அறியலாம்.


     1 See the Annual Reports on South Indian Epigraphy for the
year 1902. Numbers 603 -606

     See also South Indian Inscriptions, Volume VIII. Numbers 200 -
203.