|  
       
             இவ்வூரில் 
        பூங்கோயில், அரநெறி, பரவையுண்மண்டளி என்னும்  
        மூன்று பாடல் பெற்ற கோயில்கள் இருக்கின்றன. இவற்றுள்  
        புற்றிடங்கொண்டார் (வன்மீகநாதர்) எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலே  
        பூங்கோயில் எனப் பெயர்பெறும். இதுவே திருமூலட்டானம் எனவும்  
        வழங்கப்பெறும். இதற்கு முப்பத்துநான்கு பதிகங்கள் இருக்கின்றன. 
            அரநெறி, 
        நமிநந்தி அடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி  
        வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். இச்செய்தியைத் திருநாவுக்கரசு  
        பெருந்தகையார் இவ்வூர்த் திருவிருத்தத்தில் நம்பிநந்தி நீரால்  
        திருவிளக்கிட்டமை நீணாடறியுமன்றே எனச்சிறப்பித்துள்ளனர். இது,  
        கோயில் திருவிசைப்பாப் பதிகம் பாடிய கண்டராதித்த சோழதேவரது  
        மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை  
        உடையது. இதற்கு அப்பர் அருளிய பதிகங்கள் இரண்டு உள்ளன.  
        இக்கோயில் இரண்டாம் பிராகாரத்தில் மேற்குமுகமாக இருக்கின்றது. 
            பரவையுள் 
        மண்டளி, பரவைநாச்சியார் தமது மாளிகையின் ஒரு  
        பகுதியில் மண்ணால் சிறுகோயில் கட்டி, அதில் இறைவனை  
        எழுந்தருளுவித்து நாளும் வழிபட்டகோயிலாகும். இது சுந்தரமூர்த்தி  
        சுவாமிகளால் பாடப்பெற்ற சிறப்புடையது. இது தெற்குக் கோபுரத்திற்கு  
        அண்மையில் இருக்கின்றது. (ஒருகாலத்து வருணன் இந்நகர் மீது அனுப்பிய  
        கடலை உண்டமைபற்றி இத்தலத்துக்குப் பரவையுண்மண்டளி என்னும்  
        பெயரெய்தியது என்றும் கூறுவர்). 
            ஆக, 
        இத்தலத்திற்கு முப்பத்தேழுபதிகங்களும், வேறு திருமுறைகளில்  
        பல பாடல்களும் இருக்கின்றன. இத்தலத்தின் தேரும், திருவிழாவும்,  
        திருக்கோயிலும், திருக்குளமும் இவ்வூர்த் தேவாரங்களில் வைத்துப்  
        பாடப்பெற்றுள்ளன. திருக்குளமும் திருக்கோவிலும், செங்கழுநீர் ஓடையும்  
        தனித்தனி ஐந்து வேலிகள் பரப்புடையன. பிறக்க முத்திதருவது, தியாகேசர்  
        எழுந்தருளிய ஏழவிடங்கத் தலங்களுள் முதன்மைபெற்றது. பஞ்ச பூதத்  
        தலங்களில் பிருதிவித்தலமாயுள்ளது. திருமகளால் பூசிக்கப் பெற்றது.  
        இங்குள்ள தேவாசிரிய மண்டபத்திலிருந்த அடியவர்களைக் கண்டுதான்  
        சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையை அருளினார். அவர்  
        விருத்தாசலத்தில் மணிமுத்தாநதியில் இட்ட பொன்னை மிகப் பெரிய  
        கமலாலயம் என்னும் திருக்குளத்திலிருந்து எடுத்துப் பரவையார்க்குக்  
        கொடுத்த பழம்பதி இதுவேயாகும். அவர் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம்  
        சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து  
	 |