பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்181

     இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும்
அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை
செய்யப்பெற்றவர். மார்கழித் திருவாதிரையும் பங்குனி உத்திரமும் இவரை
வழிபடற்குரிய சிறந்த நாள்கள் என்று அறிஞர்கள் உரைத்துள்ளனர். இவர்
எழுந்தருளியிருக்கும் இடம் தேவசபை என்றும், இவருக்கு தென்றல்
காற்றுவரும் கல்சன்னல் திருச்சாலகம் என்றும், இவருக்குரிய கொடி
தியாகக்கொடி என்றும், இவருடைய தேருக்கு ஆழித்தேர் என்றும், இவரை
எழுந்தருளப்பண்ணும் பிள்ளைத் தண்டுகள் திருவாடுதண்டு, மாணிக்கத்
தண்டு என்றும் பெயர் பெற்றுள்ளன. இவர் சந்நிதியில் நந்திதேவர் நின்ற
திருக்கோலத்தில் உள்ளார். இத்தலத்து வழிபாட்டுக் காலங்களுள்
திருவந்திக்காப்பு மிக்க விசேடமுடையது. இவருடைய நடனம் அஜபாநடனம்,
புயங்க நடனம் எனப் பாராட்டப்படும். ஸ்ரீ கமலை ஞானப்பிரகாச சுவாமிகள்
தருமை ஆதீனத்தை நிறுவிய ஸ்ரீ குருஞான சம்பந்தருக்கு உபதேசம் செய்த
அருள்மிகு சித்தீச்சுரம் திருக்கோயில், ஆலயத்தின் வடபால் உள்ளது.

     தலவிநாயகர் வாதாபிவிநாயகர்.

     1. திருவாரூர் மும்மணிக்கோவை:- இது அறுபான் மும்மை
நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனாரால்
இயக்கப்பெற்றது. பதினோராந் திருமுறையில் உள்ள நூல்களுள் ஒன்றாய்
விளங்கும் சிறப்புடையது.

     2. கமலாலயச் சிறப்பு:- இது சிதம்பரம் மறைஞான சம்பந்தரால்
இயற்றப்பெற்றது.

     3. திருவாரூர்ப் புராணம்:- நிரம்ப அழகிய தேசிகருடைய
மாணாக்கராகிய அளகைச் சம்பந்தர் என்பவரால் செய்யப்பெற்றது.

     4. திருவாரூர் உலா:- அந்தகக்கவி வீரராகவ முதலியாரால்
இயற்றப்பெற்றது.

     5. தியாகராச லீலை:- திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றது. இது முற்றுப்பெறாத நிலையில்
உள்ளது.

     6. திருவாரூர் நான்மணிமாலை:- இதை அருளியவர் குமரகுருபர
சுவாமிகள்.