|
இறைவர்
நிகழ்த்தியருளிய விசேடங்களாகும். இவைகளுள்
ஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு இறைவர் ஆயிரம் பொன்
அளித்தருளியதை ஆண்ட அரசர் (திருநாவுக்கரசர்) இவ்ஊர்ப்பதிகத்தில்
கழுமலவூரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும்
ஆவடுதுறையனாரே எனக் கூறியிருப்பது அறிதற்குரியதாகும்.
மூவர்களுடைய திருப்பதிகங்கள் எட்டையும், திருமூலர் திருமந்திரம்
மூவாயிரம் பாடல்களையும், சேந்தனார் திருவிசைப்பாப் பதிகம் ஒன்றையும்
பெற்ற பெருமையுடைய பதி இது.
திருக்கயிலாய
பரம்பரையில் சிவஞானதேசிகராய் எழுந்தருளியுள்ள
ஸ்ரீலஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால் நிறுவப்பெற்றதும், சைவ சித்தாந்தத்திற்கும்
தமிழுக்கும் நல்ல ஆக்கத்தை அளித்து வருவதும் ஆகிய பழமையும்
பெருமையும் வாய்ந்த திருமடாலயம் ஒன்று திகழும் பதி இது.
இவ்வூர்த்
திருக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களுள், முதலாம்
பராந்தகன், முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், இவனது
மகனாகிய விஜயராஜேந்திரன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன்,
திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன் முதலானோர் காலத்தவையும்,
பாண்டியர்களுள் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலத்ததுமான
கல்வெட்டுக்கள் உள.
திருக்கோயில்
கட்டப்பெற்ற காலம்:
இத்திருக்கோயிலில்
தில்லைச்சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்த
முதற்பராந்தக சோழன் காலத்து ஒன்பது கல்வெட்டுக்கள் பொறிக்கப்பெற்று
இருக்கின்றன. இப்பராந்தகன் கி.பி.907 முதல் கி.பி.948 வரை
சோழமண்டலத்தை ஆட்சி புரிந்தான். இம்மன்னன் தன் முப்பத்தெட்டாம்
ஆட்சியாண்டில் (907+38=கி.பி.945) 500 கழஞ்சு பொன் கொடுத்துள்ளான்.
அப்பொன்னைக்கொண்டு இக்கோயில் குடப்படை பீடத்துக்குமேல் திருப்பணி
செய்யப்பெற்றது. அத்திருப்பணி முடிவு பெற்று கும்பாபிடேகஞ் செய்யக்
குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது சென்றிருக்கவேண்டும். பராந்தகன்
ஆட்சியின் இறுதிக்காலத்தில் (கி.பி.947) அதாவது, இன்றைக்கு 1040
ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயில் கற்றளியால் ஆக்கப்பெற்றதாகும்.1
1
See the Annual Reports on South Indian Epigraply for the
years 1925 - 1926. Numbers 101 - 162, 59 - 72.
|