பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்197

கூடியிருந்த தென்கரை சாக்கைவேலி ஆன நில அளவுப்படி அரையே
இரண்டுமாவும், திரு ஆவடுதுறை ஆழ்வார் தேவதானம் நெற்குப்பை
பதிற்றுவேலியினும் கிழக்கடைய மாம் பள்ளி வாய்க்காலுக்கு வடக்கு நிலம்
முக்காலும் ஆக நிலம் ஒன்றே எழுமாவை நிர்த்தபோகமாக
அளித்திருந்தனர். இச்செய்தி முதலாம் இராஜராஜசோழரின் ஒன்பதாமாண்டுக்
கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது.

விக்கிரமபாண்டியன் சந்தி:

     விக்கிரமபாண்டியன் தான் பிறந்த அத்தநட்சத்திரத்தில் தன்பேரால்
கட்டின விக்கிரமபாண்டியன் சந்திக்கு அமுதபடி, சாத்துபடி உள்ளிட்ட
நிவந்தங்களுக்கு உடலாக விருதராச பயங்கர வளநாட்டுக் கஞ்சனூர்ப்பற்றுத்
தென்கால் திரைலோக்கியான விருதராச பயங்கரச் சதுர்வேதிமங்கலத்துக்
குலோத்துங்கசோழன் பெருவழிக்கு உட்பட்ட திறப்பில் இருபதுவேலியும்,
துறைசையார் அகரமான இராஜேந்திரசோழச் சதுர்ப்பேதிமங்கலத்துப் பிடாகை
கூத்தனூர் கொடியாலத்து விட்ட நிலம் பதிற்றுவேலியும், வேணவரை
நல்லூரில் நான்கு வேலியும், ராட்சதச்சதுப் பேதிமங்கலத்துப் பிடாகையூரிலும்
அனபாய சதுர்ப்பேதிமங்கலத்துப் பிடாகை கண்டியூரிலும் நிலம் இருபத்தாறு
வேலியும் ஆக நிலம் அறுபதிற்று வேலியைக் கொடுத்திருந்தான். மேற்குறித்த
இவைகளன்றித் திருவாவடுதுறை ஆழ்வார்க்கு சங்கிராந்திதோறும் முக்குறுணி
நெல்லின் அரிசியால் அமுது செய்விப்பதற்கும், இரண்டு அயன
சங்கிராந்திக்கும் நூற்றெட்டு கலசத்தில் ஸ்நபனம் செய்விக்கவும் வடகரை
தேவதானம் கார்நாட்டுத் தனிக்கடம்பூர் உடையான் கண்ணி புலியூர் நக்கர்
அளித்த எண்கழஞ்சு பொன் கொண்டு மூன்றுமா நிலம் வாங்கி அளிக்கப்
பெற்றிருந்தது. இவைபோன்று அளிக்கப்பெற்ற நில நிவந்தங்கள் பலவாகும்.
(ஸ்நபனம்-திருமஞ்சனம்).

வைத்தியத்திற்கு அளிக்கப்பெற்ற நிவந்தம்:

     உய்யக் கொண்டார் வளநாட்டு சோழேந்திரசிங்கமலத்து சவர்னன்
அரையன் சங்கரனான உத்தமசோழ அசலரையனுக்கும் அவன்
வம்சத்தார்க்கும் திருவாவடுதுறையில் வைத்யஞ் செய்து கொண்டு உண்ணும்
பொருட்டு, ஆழ்வார் ஸ்ரீ பராந்தக ஸ்ரீ குந்தவைப் பிராட்டியார்
இராஜேந்திரசிம்ம வளநாட்டு இன்னம்பர்நாட்டுப் பழையவானவன் மாதேவி
சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடத்தில் நூற்று இருபது காசு கொடுத்து நிலம்
எட்டுமாக்காணி முந்திரிகைக்கீழ் அரையும் குழி ஒன்றும் மனை இரண்டும்
வாங்கி அளித்துள்ளனர்.