பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்209

கல்வெட்டு:

     இத்திருக்கோயிலில் சோழ மன்னரில் இராஜகேசரி வர்மரின் நான்காம்
ஆண்டிலும், விசயநகர வேந்தரில் வீர கம்பண்ண உடையார் காலத்திலும்
பொறிக்கப்பெற்ற இரண்டு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றுள்
சோழமன்னரின் கல்வெட்டு, அரிஞ்சிகை விண்ணகரம் என்னும்
திருமால்கோயில் இன்னம்பரில் இருந்த தென்னவன் விழுப்பரையனுடைய
மனைவி அரிஞ்சிகையால் ஐந்து அந்தணர்களுக்கு அன்னமளிக்க நிபந்தம்
அளித்ததைக் கூறுகின்றன. வீரகம் பண்ண உடையார் கல்வெட்டு, துருக்கர்
படையெடுப்பால் நாற்பது ஆண்டுகள் இக்கோயில் பூசையின்றிக்
கிடந்ததையும் குறிப்பிடுகின்றது. மேற்குறித்த சோழர் கல்வெட்டு இவ்வூரை
வடகரை இன்னம்பர் நாட்டு இன்னம்பர் என்று குறிப்பிடுகின்றது.

11,திருஉசாத்தானம்

     இராமபிரான் இலங்கைக்குச் செல்வதன் முன் இங்கு மந்திர உபதேசம்
பெற்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது. இதற்குக் கோயிலூர் என்னும் வேறு
பெயரும் உண்டு. தில்லைப்பதியான் இங்கு விரும்பி எழுந்தருளியிருக்கும்
காரணம் பற்றிக் கோயிலூர் என்னும் பெயர் எய்திற்று என்பர். அதற்கு
"நறைகமழ் தில்லையான் உறை விடம் திருவுசாத்தானமே" என்னும் இவ்வூர்
ஞானசம்பந்தப் பெருமானின் பதிக அடியைக்காட்டுவர்

.      இத்தலம் முத்துப்பேட்டை தொடர் வண்டி நிலையத்திற்கு வடக்கே
2.கி.மி. தூரத்தில் இருக்கிறது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள்
107ஆவது ஆகும்.

     தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி,
பட்டுக்கோட்டை முதலிய பல ஊர்களிலிருந்து பேருந்துகளில் முத்துப்
பேட்டை சென்று அங்கிருந்து மன்னார்குடி சாலையில் 2.கி.மீ. தூரம்
சென்றால் கோயிலை அடையலாம்.

     இறைவரின் திருப்பெயர்-மந்திரபுரீசுவர். இவர் திருமேனி வெண்மை
நிறம் பொருந்தியதாயிருக்கிறது. இறைவியின் திருப்பெயர்-பெரியநாயகி.
இராமன், இலக்குமணன், சாம்புவான்,