| 
             பாடல், 
        கொம்பிலாப் பாடல் முதலிய பல்வேறு வகையான பாடல்களை அருளிச் செய்தவர் ஞானசம்பந்தர்.
       சித்திரக் 
        கவிகள் அனைத்தும் சீகாழிக்கு உரியனவாகவே அமைந்துள்ளன. எல்லாப் பண்களிலும், கட்டளைகளிலும் சீகாழித்
 திருப்பதிகங்கள் உள்ளன. இவை ஆளுடைய பிள்ளையார் தமக்கு
 சிவஞானம் அளித்தருளிய அத்தலப் பெருமான் மீது கொண்டிருந்த ஆராத
 காதலை வெளிப்படுத்துவனவாகும்.
       திருமுறைகளைப் 
        பண் வரிசையில் அமைத்த நம்பியாண்டார் நம்பிகளும் பண்வரிசையில் பெரும்பாலும் சீகாழிக்குரிய தலத்தை
 முன்வைத்தே அடைவு செய்துள்ளார்.
       திருஞானசம்பந்தரின் 
        மூன்றாம் திருமுறையில், காந்தார பஞ்சமம், கொல்லி, கொல்லிக் கௌவாணம், கௌசிகம், பஞ்சமம், சாதாரி,
 பழம்பஞ்சுரம், புறநீர்மை, அந்தாளிக் குறிஞ்சி என்னும் ஒன்பது பண்களுக்
 குரிய நூற்றிருபத்தைந்து திருப்பதிகங்கள் உள்ளன. புதிதாகக் கல்வெட்டில்
 கிடைத்த திருவிடைவாய்த் திருப்பதிகமும் பிற்சேர்க்கையாக 126ஆவது
 பதிகமாகச் சேர்க்கப் பெற்றுள்ளது.
       திருஞானசம்பந்தர் 
        தமக்கு உபநயனச் சடங்கு நிகழ்ந்தபோது மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் தந்த மறையவர்க்கு அறிவுறுத்திய
 பஞ்சாக்கரத் திருப்பதிகமும், தம் தந்தையார் செய்ய விரும்பிய வேள்விக்குப்
 பொன் வேண்டிப் பாடிய உலவாக்கிழித் திருப்பதிகமும், மதுரையில்
 அடியார்களுடன் தங்கியிருந்தபோது திருமடத்திற்குச் சமணர்கள் இட்ட
 தீயைப் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே எனப் பணித்துப் பாடிய
 செய்யனே என்னும் திருப்பதிகமும், சமணர்களோடு வாதுசெய்ய ஆலவாய்ப்
 பெருமான் திருவுளக் குறிப்பறியப் பாடிய வேத வேள்வியை, காட்டுமாவது
 ஆகிய முதற்குறிப்புகளுடைய திருப்பதிகங்களும், அனல் வாதத்தில் இட்ட
 ஏடு வேவா வண்ணம் பாடிய தளிரிள வளரொளி என்ற திருப்பதிகமும்,
 புனல்வாதத்தின்போது வைகையாற்றில் இட்ட திருப்பாசுரமும்,
 திருக்கொள்ளம்பூதூரில் நாவலமே கோலாகக் கொண்டு ஓடம் உய்த்த
 திருப்பதிகமும், திருமணம் காண வந்தோர் அனைவரும் பிறவிப் பிணி
 தீர்ந்து முத்திப் பேறு பெற அருளிய நமச்சிவாயத் திருப்பதிகமும், பாதமெய்
 நீழல் மருவும் பருவம் ஈதென வேண்டி ஈறில் பெருஞ்சோதியில் புகும்
 நிலையில் பாடிய கல்லூர்ப் பெருமணம் என்ற திருப்பதிகமும்
 இத்திருமுறையில் அமைந்துள்ள அற்புதத் திருப்பதிகங்கள் ஆகும்.
 |